Published : 04 Apr 2016 12:25 PM
Last Updated : 04 Apr 2016 12:25 PM

தனியார் மதுபானக் கூடம் அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க சுல்தான்பேட்டை மக்கள் முடிவு

திருப்பூர் அருகே மங்கலம் சுல்தான்பேட்டையில் தனியார் மதுபானக் கூடம் அகற்றப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

திருப்பூர் அருகே மங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில், கடந்த 6-ம் தேதி தனியார் மதுபானக் கூடம் தொடங்கப்பட்டது. இந்த மதுக்கூடம் வரும் முன்னரே, எங்கள் பகுதியில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள் எதுவும் வரக்கூடாது என, கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.

ஆனால், எங்களின் கோரிக்கைக்கு எதிராக தனியார் மதுபானக் கூடம் திறக்கப் பட்டுள்ளது. கடையை அகற்றக் கோரி, கடந்த 7-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டோம்.

அப்போது, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார், மார்ச் 17-ம் தேதிக்குள் கடை அகற்றப்படும் என்று உறுதியளித்திருந்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால், மதுபானக் கூடத்தை அகற்றுவதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது சுல்தான்பேட்டை. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோயிலில் தொடங்கி, பேருந்து நிறுத்தம் வரை பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆங்காங்கே வைத்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x