Published : 03 Mar 2022 06:31 AM
Last Updated : 03 Mar 2022 06:31 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல் பரவியதால், திமுக - பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பாஜக 4, திமுக, அதிமுக தலா 3, சுயேச்சைகள் 4 மற்றும் காங்கிரஸ் ஒருவார்டில் வெற்றி பெற்றிருந்தனர்.
நாளை (4-ம் தேதி) பேரூராட்சி தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், 8 உறுப்பினர்கள் ஆதரவு பெறுவோர், பேரூராட்சி தலைவராகலாம் என்ற நிலை உள்ளது.
கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுயேச்சைகள் 4 பேரும் திமுகவுக்கு ஆதரவளித்தனர். அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் பாஜகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் திமுகவும், பாஜகவும் தலா 7 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சமநிலையை அடைந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகாவின் ஆதரவைப் பெறுவதற்கு இருதரப்பினரும் தீவிரமாக முயற்சித்தனர். மல்லிகா திடீரென தலைமறைவானார்.
காங்கிரஸ் சார்பில் வென்ற மல்லிகா, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், இதனால் அவரை பாஜகவினர் மறைத்து வைத்துள்ளனர் எனவும் திமுகவினர் குற்றம்சாட்டினர். மல்லிகா வீட்டின் முன்பு திமுக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் நேற்று தென்தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பதவி ஏற்புக்காக மல்லிகா பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் பாஜகவினர் உடன் வந்தனர்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் தாமரை பாரதி தலைமையில், திமுகவினரும் அங்கு திரண்டனர். மல்லிகாவின் சகோதரரான திமுகவைச் சேர்ந்த முருகன், ‘கூட்டணி கட்சியான திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது’ எனவும், மல்லிகாவிடம் ஆவேசத்துடன் கூறினார்.
அப்போது மல்லிகாவுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள், முருகனைத் தாக்கினர். உடனே, பாஜக - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர், தென்தாமரைக்குளம் பேரூராட்சியின் 15 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். தலைவர் தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகா, பாஜக வசம் சாய்ந்ததாக எழுந்த பிரச்சினை, அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT