Published : 03 Mar 2022 05:05 AM
Last Updated : 03 Mar 2022 05:05 AM

தாம்பரம், ஆவடி, காஞ்சி மாநகராட்சிகளில் 168 பேர் பொறுப்பேற்பு

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. பதவி பிரமாணம் செய்துகொண்ட மாமன்ற உறுப்பினர்கள் அமைச்சர், எம்எல்ஏக்கள், ஆணையர் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.படம்:எம்.முத்துகணேஷ்

தாம்பரம்/ஆவடி/காஞ்சி: தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 168 மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக உறுதிமொழியை வாசித்துப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நகராட்சியாக இருந்த தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகியவை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. பின்னர் முதன்முறையாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 168 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை பதவியேற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் காலை 9:30 மணிக்குப் பதவியேற்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சில உறுப்பினர்கள் தாமதமாக வந்ததால் 9:45 மணிக்கு விழா தொடங்கியது. செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடந்த பதவியேற்பு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), ப.அப்துல் சமது (மணப்பாறை) ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பினர்களுடன் 3 பேர் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாநகராட்சி ஆணையர் பா.இளங்கோவன், ஒவ்வோர் உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உறுப்பினர்கள் உறுதிமொழியைப் படித்து, கையெழுத்திட்டுப் பதவியேற்றுக் கொண்டனர். சில உறுப்பினர்கள் உறுதிமொழியை படித்தபோது தடுமாறினர். சில உறுப்பினர்கள், குலதெய்வத்தைக் குறிப்பிட்டு உறுதிமொழி எடுத்துகொண்டனர். பதவியேற்பு முடிந்ததும், அனைத்து உறுப்பினர்களும், அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக பதவியேற்க வந்த 40-வது வார்டில் திமுகவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயபிரதீப், 44-வது வார்டு கவுன்சிலர் ராஜா ஆகியோர் அமைச்சர் அன்பரசன் காலில் விழுந்து ஆசி பெற்றுப் பதவியேற்றார்.

நிகழ்ச்சியில் உறுப்பினர்களை வாழ்த்தி அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போதே, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பின் ஆட்சி மாற்றத்தால் அத்திட்டத்தை கிடப்பில் போட்டனர். தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சியுடன் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளும் இணைக்கப்படும்.

சென்னை மாநகராட்சி போன்று இம்மாநகராட்சியிலும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், மக்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 50 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்) உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தலில் வென்றவர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ர.சரஸ்வதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்றுக் கொண்டவர்களில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர், அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோரின் காலில் விழுந்து வணங்கினர்.

விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது: நகர்மன்றம் மூலம் மக்கள் பணி மற்றும் நான் சார்ந்திருக்கிற இயக்கப் பணிகளைச் சிறப்பாகச் செய்ததன் மூலம் இன்று அமைச்சராக உயர்ந்துள்ளேன். அதேபோல் உறுப்பினர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு நலத்திட்டப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டால் நாளை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக வாய்ப்புள்ளது. ஆகவே, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதி மக்களுக்காக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x