Published : 07 Apr 2016 10:13 AM
Last Updated : 07 Apr 2016 10:13 AM

இளம் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ய புதிய யுக்தி: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

இளம் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிரச்சார சுற்றுப்பயணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 50 மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கேரள மாநில செயலாளர்களுக்கு சென்னை வரும்படி கட்சித் தலைமையிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர்களாக உள்ள ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் மாவட்ட செயலாளர்களாக உள்ள ஜெயபால், எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட 47 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர் மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த மாவட்டங்களின் பொறுப்பை அருகில் உள்ள மாவட்ட செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநில செயலாளர் புருஷோத்தமன், கேரள மாநில செயலாளர் பிதீப் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்துக்கு கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார். மேலும், அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் பன்ருட்டி ராமச்சந்திரன், சி.பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடந்த இந்த கூட்டத்தில், பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு மாவட்டங்களில் உள்ள தொகுதி பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டன. மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் , சுற்றுப்பயணத்தின்போது பிரச்சார பொதுக்கூட்டங்களின்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இள்ம் வாக்காளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய முறை, தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் போது, வேட்பாளர்களை அழைத்து வருதல் உள்ளி்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் அறிவுறுத்தியதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x