Published : 26 Apr 2016 08:03 AM
Last Updated : 26 Apr 2016 08:03 AM

சென்னையில் 2-ம் நாள் 37 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் 2-ம் நாளான நேற்று 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் 2-வது நாளாக நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. முதல் நாளில் 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். 2-வது நாள் 37 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை சென்னையில் மொத்தம் 42 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, அன்பு உதயம் கட்சி வேட்பாளர் எம்.சுபாஷ்பாபு, சுயேச்சை வேட்பாளர் மாரிமுத்து ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன், மாற்று வேட்பாளராக சி.விஜயன், திமுக சார்பில் என்.ஆர்.தனபாலன், அவருக்கு மாற்று வேட்பாளராக என்.ஆர்.டி.பிரேம்குமார், பாஜக சார்பில் ஆர்.பிரகாஷ், சிவசேனா கட்சி சார்பில் எஸ்.வெங்கடேசன், சுயேச்சையாக ஜி.ஆர்.முகமது யூசுப் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கொளத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், மாற்று வேட்பாளராக சு.சிதம்பரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கு.க.செல்வம், மதிமுக சார்பில் அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளர் சி.அம்பிகாபதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், மதிமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, அவருக்கு மாற்றாக எஸ்.முரளி, ராயபுரம் தொகுதியில் தொழிலாளர் முன்னேற்றக் கழக வேட்பாளர் பி.பராங்குசம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

சைதாப்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளர் டி.ஆர்.சகாதேவன், சுயேச்சை வேட்பாளர் வி.சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.ஏழுமலை ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் தனசேகரன், மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜயகுமாரி, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் தனது பெயரில் 3 வேட்புமனுக்களையும், அவருக்கு மாற்றாக எஸ்.மதன்மோகனும் மனு தாக்கல் செய்தனர்.

பாஜக வேட்பாளர் தாமரை கஜேந்திரன், அவருக்கு மாற்றாக ஆர்.என்.சீனிவாசன், சுயேச்சை வேட்பாளர் டி.கே.சையது சுபைர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தியாகராயநகர் தொகுதியில், திமுக சார்பில் டாக்டர் கனிமொழி, பாஜக சார்பில் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மயிலாப்பூர் தொகுதியில், சிவசேனா சார்பில் வி.விஜயகிருஷ்ணா, இந்திய மக்கள் கட்சி சார்பில் ஜெபமணி, சுயேச்சையாக குப்பல் ஜி.தேவதாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். சுயேச்சை வேட்பாளர் குப்பல் ஜி.தேவதாஸ், வைப்புத்தொகை ரூ.10 ஆயிரத்தையும் நாணயங்களாக எடுத்து வந்து செலுத்தினார்.

எழும்பூர் (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐ.ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பி.ரங்கநாதன் தனது பெயரில் 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x