Published : 01 Apr 2016 12:17 PM
Last Updated : 01 Apr 2016 12:17 PM

தேமுதிகவினருக்கு மாயவலை வீசுகிறார் ஸ்டாலின்: பிரேமலதா குற்றச்சாட்டு

தேமுதிகவினருக்கு மாயவலை வீசி அப்பாவிகளை கட்சியிலிருந்து பிரித்து அழைத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையை அழிக்க திட்டமிடுகிறார் ஸ்டாலின். இதனைக் கண்டு தேமுதிகவினர் அமைதியாக இருக்க மாட்டார்கள் என கோவை பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

கோவை பீளமேட்டில் தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நலக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, "ஆட்சிக் கனவுடன் யாரும் இக் கட்சிக்கு வரவில்லை. ஆனால் மாய வலைகளை விரித்து அப்பாவிகள் சிக்குவார்களா என ஸ்டாலின் திட்டமிடுகிறார். தேமுதிக மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜுக்கு, அதே பதவியை திமுக கொடுத்திருக்க வேண்டும். கட்சியிலிருந்து பிரித்து அழைத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையை அழித்தால் தேமுதிகவினர் அமைதியாக இருக்க மாட்டார்கள்" என்றார்.

'யாரையும் திட்ட வேண்டியதில்லை'

அவர் மேலும் பேசும்போது, "தெய்வத்தின் ஆசீர்வாதம், மக்கள் ஆதரவோடு இத்தேர்தலில் தேமுதிக கூட்டணி ஆட்சியைப் பிடித்து மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக, அதிமுக கட்சிகளைத் திட்டி வாக்குகளைப் பெறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

50 வருடங்களில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர். கொஞ்சம் மனிதாபிமானத்துடன் ஆட்சி செய்தார். அதன்பின் வந்த இரு கட்சிகளுமே தமிழகத்தை ஊழலில் தள்ளிவிட்டன.

நல்லது செய்திருந்தால் ஆட்சியைத் தொடருங்கள் என வழிவிட்டிருப்போம். ஆனால் எந்த மாற்றமும் இல்லாததாலேயே தேமுதிக மாற்றாக வந்தது. அதிமுக கூட்டணி சரிப்பட்டு வராததால் கூட்டணியை விட்டும், சட்டப்பேரவையை விட்டும் தேமுதிக வெளியேறியது.

சட்டப்பேரவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என்ற உறுதியுடன் கேப்டன் வெளியேறினார். கேப்டன் நினைத்தால் திமுகவுடன் கூட்டணி சேர முடியாதா? எவ்வளவோ வதந்திகள் வந்தும்கூட அவற்றை தவிடுபொடியாக்கி நல்லவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

பாண்டவர் அணிக்கு ஆட்சியைக் கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். எங்களுக்குள் எந்தக் குழப்பமும் வராது. 234 தொகுதிகளிலும் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்.

ரூ.1 லட்சம் கோடி கடனில் விட்டுவிட்டு போவதாக ஜெயலலிதா பேசினார். ஆனால் இன்று ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டு அவர் போகப் போகிறார். தராசு போல நடுநிலையாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம் பண பலம் உள்ளவர்களுக்கு சாதகமாகச் செயல்படுகிறது. அதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

வீடுதோறும் ரேஷன் பொருட்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். பேப்பர், பால், சிலிண்டர் வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் ஏன் வராது. நிச்சயம் கொண்டு வருவோம். ஏராளமான திட்டங்களை தேமுதிக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x