Published : 21 Apr 2016 02:21 PM
Last Updated : 21 Apr 2016 02:21 PM

மதுரை மேற்கு தொகுதியில் எந்த வசதியும் இல்லை: மார்க்சிஸ்ட் வேட்பாளர் குற்றச்சாட்டு

மதுரை மேற்கு தொகுதியில் குடிநீர், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என அத்தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ. வாசுகி குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து, அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மேற்கு தொகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட 15 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை உள் ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. நான் வெற்றி பெற்றால் தொகுதிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுப்பேன். ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாடக் குளம் கண்மாய், முத்துப்பட்டி வீரமுடையான் கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு நீராதாரம் மேம்படுத்தப்படும்

மேற்குத்தொகுதியில் நசிந்து வரும் சிறு, குறு தொழில்களான அப்பளம், உதிரி பாகங்கள், ஸ்டவ் உள்ளிட்ட தொழில்கள் பாதுகாக்கப்படும். குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தரப்படும். மதுரையின் அடையாளமாக உள்ள வைகையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்புடன் கூடல்நகர் ரயில்நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள காட்டுநாயக்கர் மலை வேடர் சமூகங்களுக்கு உள்ள சாதிச் சான்றிதழ் பிரச்சினை தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்எல்ஏ புறக்கணிப்பா?

நேற்று நடந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு தொகுதி எம்எல்ஏ இரா. அண்ணாத்துரை கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து வேட்பாளர் உ.வாசுகியிடம், தற்போது எம்எல்ஏவாக உள்ள அண்ணாத்துரையின் செயல்பாடுகள் சரியில்லாததால் உங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வாசுகி, அண்ணாத்துரை ஒரு எம்எல்ஏவாக சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தெற்கு தொகுதியில் வெற்றிபெற்றார். தற்போது மேற்கு தொகுதி கிடைத்துள்ளது. இப்பகுதிக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதால் தொகுதி மக்களுக்கு நான் அறிமுகமானவள். இதை கருத்தில் கொண்டு நான் போட்டியிட மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது. கட்சியில் கோஷ்டிப் பூசல் கிடையாது. வெற்றிபெற்ற பின் மதுரையிலேயே தங்கி விடுவேன் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x