Published : 25 Feb 2022 08:07 PM
Last Updated : 25 Feb 2022 08:07 PM

சில இடங்களில் வென்றதால் பாஜக காலூன்றிவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது: முத்தரசன் சிறப்புப் பேட்டி

சென்னை: "பாஜகவையும் அந்தக் கட்சியின் கொள்கையையும் தமிழக மக்கள் ஏற்கவில்லை, ஏற்கவும் மாட்டார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: "சென்னையில் ஓர் இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் கூட பல இடங்களில், பல வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்த்து நின்று பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதற்காக, தமிழகமே சுயேச்சைகள் பக்கம் போய்விட்டது என்று அர்த்தமா?

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுகவுடன் இருந்த உறவு ஏன் முறிந்தது, அதற்கான விளக்கம் என்ன? பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியபோது, ’அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை. சட்டமன்றத்தில் அதிமுக ஆண்மையோடு செயல்படவில்லை’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அடுத்த நொடியே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ’அப்படிக் கூறியது அவருடைய சொந்த கருத்து, கட்சியின் கருத்து அல்ல. அதிமுக மிகச் சிறப்பாக எதிர்கட்சியாக செயல்படுகிறது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான உறவு என்பது இயற்கையாக அமைந்த உறவு. இந்த உறவு நீடிக்கும்’ என்று கூறினார். இயற்கையாக அமைந்த அந்த உறவு ஏன் நீடிக்கவில்லை?

ஏன் நீடிக்காமல் போய்விட்டது என்றால், ஒவ்வொரு கட்சியும், தங்களுடைய கட்சியை பலப்படுத்த முயற்சி செய்வார்கள். பாஜக தமிழகத்தில் அத்தகைய முயற்சியை செய்கிறது. பல மாநிலங்களில் பலமாக உள்ளது போல, தமிழகத்திலும் பலமாக வேண்டும் என விரும்புகின்றனர். அந்த விருப்பத்தை தவறு என்று கூற முடியாது. ஆனால், அவர்களது விருப்பம் நிறைவேறாது.

சென்னையில் ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து மட்டும் கூறப்படுகிறது. கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டமன்ற தொகுதியிலேயே தோல்வியடைந்துள்ளனர், பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளனர்.

அண்ணாமலை நிரூபித்துவிட்டார் என்று கூற முடியாது, முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இந்த வெற்றியின் காரணமாக, பாஜக காலூன்றி விட்டது. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது.

மக்கள் மதசார்பற்ற கூட்டணியை ஏற்றுக் கொண்டதால்தான் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்கின்றனர். ஒருசில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். சில இடங்களில் வாக்குகளைப் பெற்றுள்ளனர். பல இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

குறிப்பாக கோவை பாஜகவுக்கு செல்வாக்குள்ள பகுதியென்று கூறப்பட்டது. ஆனால், அங்குதான் 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளனர். எனவே பாஜகவையோ, அந்த கட்சியின் வகுப்புவாத கொள்கையையோ, தமிழக மக்கள் ஏற்கவில்லை, ஏற்கவும் மாட்டார்கள்" என்றார்.

வீடியோ வடிவிலான அந்தப் பேட்டி > இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x