Published : 23 Feb 2022 04:44 PM
Last Updated : 23 Feb 2022 04:44 PM

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்ற வாதங்களின் விவரம்

சென்னை: திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிலையில் 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியாகி, அதனடிப்படையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்தச் சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 113 அதிமுகவினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர், அவரை ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணா ஆனந்த் முன் ஆஜர்படுத்தி வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில், பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

மேலும், அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, போலீசார் இரண்டாவது வழக்கில் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த, ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி தயாளன், ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், அவரை மார்ச் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜெயக்குமார் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியவைதான், எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது கொலை முயற்சியாகும் எனவேதான் இந்த வழக்கை 307ஆக மாற்றியுள்ளதாகவும், தகவல்தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு ஜெயக்குமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x