Published : 22 Feb 2022 08:57 PM
Last Updated : 22 Feb 2022 08:57 PM

”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...” - தேர்தல் முடிவுகள் குறித்து ஓபிஎஸ்

கோப்புப் படம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று தான். இதன் மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்குகிறது. அதிமுகவிற்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - தர்மமே மறுபடியும் வெல்லும்" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும் போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும். அதிமுக உடன்பிறப்புகள் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x