Published : 25 Apr 2016 08:18 AM
Last Updated : 25 Apr 2016 08:18 AM

கரூர் அய்யம்பாளையத்தில் அதிமுக பிரமுகர் கிடங்கில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது ஏன்?- போலீஸார் தீவிர விசாரணை

கரூர் அருகேயுள்ள அய்யம் பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன்(47). அதிமுகவைச் சேர்ந்த இவர், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டுள்ளார். இவருக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த 22-ம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு, ரூ.10.34 லட்சம் ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டறியும் இயந்திரம், 4 கார்கள், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.4.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது கிடங்கிலிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது வீடு மற்றும் கிடங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது கிடங்கில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், ‘நேஷனல் ஹெல்த் மிஷன், கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ என்று எழுதப்பட்டுள்ளது. அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்த புகாரின்பேரில், அன்புநாதன் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த ஆம்புலன்ஸ் பதிவெண், கடலூர் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்டது என்று தெரியவந்துள்ளது. எதற்காக கடலூர் மாவட்ட பதிவெண்ணில் வாகனத்தை வாங்கி, அதை ஆம்புலன்ஸாக மாற்றி, அதில் ‘நேஷனல் ஹெல்த் மிஷன், கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ என்று எழுதியுள்ளார் என்றும், இந்த வாகனத்தை எதற்குப் பயன்படுத்தி வந்தார் என்றும் அன்புநாதனிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x