Published : 16 Feb 2022 05:40 AM
Last Updated : 16 Feb 2022 05:40 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெறுகிறது. 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரத்தில் இன்றும் நாளையும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாகவே அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மநீம, அமமுக, நாம் தமிழர் என 8 முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர சில பகுதிகளில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட வாரியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள், பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நூதன பிரச்சாரம்
வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். சில வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் போட்டும், வடை சுட்டுக் கொடுத்தும், சிலர் உணவகங்களில் தோசை, பூரி ஆகியவற்றை தயாரித்துக் கொடுத்தும், சில வேட்பாளர்கள் மீன், காய்கறி விற்பனை செய்து கொடுத்தும் காலில் விழுந்தும் நூதன முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதேபோல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறான பரபரப்பு பிரச்சாரம் நாளை (பிப்.17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இன்றும், நாளையும் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால், பொதுமக்களை சந்திப்பதில் வேட்பாளர்கள், தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிமுதல் 10 மணி வரையும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகின்றனர்.
நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் நடைபெறும் வார்டுகளுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்தந்த வார்டுகளை விட்டு வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் ஒட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, அவற்றைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணம், பொருட்கள் பறிமுதல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பறக்கும் படையினரால் கடந்த பிப்.10-ம் தேதி வரை ரூ.9.28 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஜன.29-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை ரூ.6 கோடியே 89 லட்சத்து 63,778 ரொக்கம், ரூ.1 கோடியே 37 லட்சத்து 19,120 மதிப்புள்ள பொருட்கள், ரூ.1 கோடியே 1 லட்சத்து 54,294 மதிப்பு மதுபானம் என மொத்தம் ரூ.9 கோடியே 28 லட்சத்து 37,192 மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, வாக்குப்பதிவுக்கான மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றும் வகையில், வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், முகமூடி, கையுறைகள், முழு உடல் கவசங்கள், வாக்காளர்களுக்கான கையுறைகள், பஞ்சு, குப்பைவாளிகள் உட்பட 13 பொருட்கள் கூடுதலாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வழங்கப்பட உள்ளது.
வரும் பிப்.18-ம் தேதி அதாவது தேர்தலுக்கு முந்தைய நாள், காலை வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுலர்கள் 18-ம் தேதி மாலையே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று விடுவார்கள்.
இதைத்தொடர்ந்து வரும் பிப்.19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலுக்காக 649 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 1644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 80 ஆயிரம் காவலர்கள் மற்றும் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் என 1.33 லட்சம் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த தேர்தலில் 2.79 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் முறையாக சீலிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, அதற்கான அறையில் வைக்கப்படும்.
தொடர்ந்து, 2 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கையானது 268 மையங்களில் நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப் படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT