Published : 15 Feb 2022 09:19 AM
Last Updated : 15 Feb 2022 09:19 AM
மதுரை: மேலூரில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்று மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுநடைபெற்ற காணொலி பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் மதுரையைலண்டனாக்குவோம், சிங்கப்பூராக்குவோம் என்றனர். பறக்கும் பாலம், மோனா ரயில் என பல திட்டங்களை அறிவித்தும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே உள்ள மதுரையைச் சீரழித்தது மட்டுமே நடந்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஊழலில் மூழ்கடித்தனர். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கடைகள் அமைத்ததில் ஊழல் நடந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மண் அள்ளியதில் ஊழல் நடந்தது. மதுரை மக்கள் இந்த ஊழலை மறக்கவில்லை. சென்னையுடன் சேர்த்து மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழலும் விசாரிக்கப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது. அடிமைத்தனம்தான் தெரியும். அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என நினைவூட்டவா? பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொலை, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொலை,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் கொலை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி கொலை, சிறையில் ராம்குமார் இறப்பு, திருச்சியில் ராமஜெயம் கொலை, கச்சநத்தத்தில் பட்டியல் இனத்தவர் 3 பேர் கொலை, உதவி ஆய்வாளர் வில்சன் கொலை, ஜெயலலிதா பங்களாவில் கொலை,கொள்ளை என மாநிலம் முழுவதிலும் தினசரி நடந்ததே.
ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரது ஆட்சிக்காலம்தான் தமிழகத்தின் இருண்ட காலம்.
இல்லத்துப் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம். 2024-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது என ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. கற்பனையில் கோட்டை கட்டுகிறார். யாரை மிரட்டுகிறீர்கள். கொஞ்ச நாட்களாக மிரட்டிப் பார்க்கிறீர்களே. மிசாவையே பார்த்த ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியுமா? கற்பனையிலும் அப்படி கனவு காணாதீர்கள்.
மக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பார்த்து பேச பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது. பழனிசாமியின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி தர வேண்டும். 100-க்கு 100 நம் அணிதான் வெற்றிபெறும். நன்றி சொல்ல மதுரைக்கு வருகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நேற்று மதுரை மாநகர் உட்பட மாவட்டத்தில் 200 இடங்களில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டப் பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, எம்.மணிமாறன் ஆகியோர் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT