Published : 12 Feb 2022 03:35 PM
Last Updated : 12 Feb 2022 03:35 PM
புதுச்சேரி: கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் வேட்பாளர் மற்றும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே கடலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு புதுச்சேரி வந்தார்.
நூறடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த பன்னீர்செல்வத்தை இன்று புதுச்சேரி அதிமுக செயலாளர்கள் அன்பழகன், ஓம் சக்தி சேகர், முன்னாள் எம்பி ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில். தமிழக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம், அதிமுக எம்எல்ஏக்கள் அருண்மொழி தேவன், பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது:
"தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு மீது மிகப்பெரிய அதிருப்தியிலும், வருத்தத்திலும் மக்கள் உள்ளார்கள். எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நூற்றுக்கு நூறு சதவீதம் மாபெரும் வெற்றி அடையும்."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT