Published : 09 Feb 2022 01:40 AM
Last Updated : 09 Feb 2022 01:40 AM
சென்னை: ‘நீட் தேர்வு’ என்ற வார்த்தை காங்கிரஸ் ஆட்சியில்தான் வந்ததுன்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதால் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து நேற்று பேரவை கூட்டத்தில் நடந்த விவாதம்: விஜயபாஸ்கர்: நீட் தேர்வுக்கு முன்பு நுழைவுத் தேர்வு என்பது1984-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது. 2005-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று சட்டம் கொண்டுவந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இது ஆதாரமற்றது. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் 2006-ல்சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றார்.
விஜயபாஸ்கர்: ஆதாரம் உள்ளது. 2005 ஜூன் 19-ல் அரசாணை போடப்பட்டது. இதை எதிர்த்து பிரியதர்ஷினி என்ற மாணவி வழக்கு போட்டதால், நீதிமன்றம் அதை ரத்து செய்தது.
அமைச்சர் பொன்முடி: 1984முதல் நுழைவுத் தேர்வு இருந்தது என்றால், அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள்?
விஜயபாஸ்கர்: நீட் என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாமல் இருந்தபோது, கடந்த 2010 டிச.27-ம்தேதி காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் முதன்முதலில் நீட் - தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்பதே வந்தது.
(இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வப்பெருந்தகை எழுந்து பேச வாய்ப்பு கேட்க, பேரவைத் தலைவர் மறுத்தார். செல்வப்பெருந்தகை பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது.)
முதல்வர் ஸ்டாலின்: பிரச்சினைகளை திசைதிருப்பி கரும்புள்ளி ஏற்பட்டுவிடக் கூடாது. உங்கள் ஆட்சியில், இதே அவையில் ஒன்று சேர்ந்து ஏகமனதாக நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை ஓராண்டு தெரிவிக்காமல் இருந்தது குறித்து தெரிவிக்க வேண்டும்.
அவை முன்னவர் துரைமுருகன்: நீயா நானா என்றால் விவாதம் போய்க்கொண்டே இருக்கும். பழைய பிரச்சினைகள் வேண்டாம்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நான் முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு வந்தது என்ற அவதூறு செய்தியை தொடர்ச்சியாக பரப்புகின்றனர். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. நீட் என்ற வார்த்தை வருவதற்கு யார் காரணம், எப்போது வந்தது என்பதை யாரும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது.
(அப்போது மீண்டும் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை அமரும்படி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.)
துரைமுருகன்: சுமுக நிலை காணவே எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். அவர் பேசும்போது குறுக்கிடகூடாது.
பேரவைத் தலைவர் அப்பாவு: நீட் தேர்வு யார் கொண்டு வந்தது என்பது விவாதம் அல்ல. ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்தே விவாதம் நடக்கிறது.
விஜயபாஸ்கர்: 2019-ல் மசோதா திருப்பி அனுப்பப்பட்டபோது, அதற்கான காரணம் கேட்டுள்ளோம். சட்டரீதியாக நுணுக்கமான விஷயம் என்பதால், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: நீங்கள் அனுப்பியபோது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கவில்லையா?
விஜயபாஸ்கர்: நீட் எதிர்ப்பில் திராவிடக் கட்சிகள் உறுதியாக உள்ளன. இதில் அரசியல், விமர்சனத்தைதவிர்த்து ஒற்றைப் பாதையில் திமுக எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT