Published : 08 Feb 2022 03:53 PM
Last Updated : 08 Feb 2022 03:53 PM

'பில்டப்' முதல் 'போதும் டாக்டர்' வரை - சிறப்புக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு 'சிரி'ப்பித்த தருணங்கள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், நீட் தொடர்பாக சீரியஸான விவாதங்களுக்கு மத்தியில், சற்றே சிரிப்பலைகள் எழும் விதமாக சில சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக, சபாநாயகர் அப்பாவு தனது முதிர்ச்சியான அணுகுமுறையால் சட்டமன்றத்தில் ஈர்த்தார். இந்த நிகழ்வுகள் அனைத்துமே நேரலையாக ஒளிபரப்பப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதிமுக, மதிமுக, விசிக, பாமக, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் என பல்வேறு கட்சி உறுப்பினர்களும் நீட் தேர்வு தமிழகத்துக்கு ஏன் வேண்டாம், தமிழக அரசின் மசோதா ஏன் முக்கியமானது என்று தங்களின் வாதங்களை முன்வைத்துப் பேசினர். அப்போது சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடைபெற்றன. அவற்றில் சில:

கசிந்த கடிதம்; கண்டித்த சபாநாயகர்: "ஆளுநர் அறிக்கை நேரடியாக சபாநாயகர் என்ற முறையில், எனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டது. என் தரப்பிலிருந்து அது பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டது. ஆனால், பேரவைக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை, பொதுவெளியில் வெளியிட்டு விவாதத்துக்கும் போராட்டத்துக்கும் வித்திட்டது ஏற்புடையதாகுமா என்பதை இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டோர் யோசித்து பார்க்கவும்" என்று சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.

வெளிநடப்புக்கு பில்ட்டப்பா! - மசோதாவை தாக்கல் செய்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியவுடனேயே, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச ஆரம்பித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, புரட்சி பாரதம் கட்சியின் உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை பேச அழைத்தார். ஆனால் பாஜகவினர் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தனர். உடனே சபாநாயகர், "ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கான முறை வரும். அப்படி உங்களுக்கும் நேரம் தரப்படும். அப்போது நீங்கள் நிச்சயம் விரிவாகப் பேசலாம். 100% உங்களுக்கு விரிவாகப் பேச வாய்ப்பு வழங்கப்படும். எல்லோரும் பேசியதை கேட்ட பின்னர் நீங்களும் பேசலாம்" என்றார்.

ஆனால் இடையூறு தொடர, நயினார் நாகேந்திரனைப் பார்த்து "நீங்கள் பேசுங்க"ள் என்று கூறினார். அப்போது நயினார் நாகேந்திரன், "மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசும்போது, கடந்த முறை சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். ஆனால் நாங்கள்தான் அன்று வெளிநடப்பு செய்துவிட்டோமே" என்றார். உடனே அப்பாவு, "நீங்கள்தான் வெளிநடப்பு செய்தீர்களே தவிர, மற்றபடி மசோதா ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டது" என்றார். தொடர்ந்து அவர் நீட் மசோதாவை தாங்கள் எதிர்ப்பதாகப் பேச ஆரம்பித்தார். குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "வெளிநடப்பு செய்வது என்றால் வெளியேறுங்கள். அதற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்?" என்றார். அவையில் சிரிப்பொலி படர்ந்தது. அதன் ஊடே பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பிடிஆர் Vs விஜயபாஸ்கர்; குறுக்கிட்ட அப்பாவு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, "ஆளுநர் அளித்த பதிலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். இது சட்ட ரீதியான விஷயம். இதை நுணுக்கமாக ஆராய வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. மாடர்ன் டென்டல் கல்லூரிக்கும் மத்திய பிரதேச அரசுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்ட வேண்டும். அதில் நீட் என்பது செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே, நீட் மசோதாவை சட்டபூர்வ நுணுக்கங்களை ஆராய்ந்து அணுக வேண்டும்" என்றார்.

அதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "விஜயபாஸ்கர் ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி, நீட் விவகாரத்தை சட்ட ரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டும் என்று கூறுகிறார். துல்லியமாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து இதை அணுக வேண்டும் என்று கூறுகிறார். அப்படியென்றால் 2019-ல் அவர்கள் கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவில் அவர்கள் சட்ட நுணக்கங்களை ஆராய்ச்சி செய்யவில்லையா?" என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயக அப்பாவு, "அவர் ஒரு நல்ல விஷயத்தைத் தானே சொல்கிறார். இதில் இந்த பதிலே தேவையில்லை" என்றார். இதனால் மூக்கு உடைந்தது போல் நிதியமைச்சர் அமர்ந்தார்.

ஆனால், விடாத தூவானம் போல் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் பேச்சுக்கு வக்காலத்து வாங்க, "நான்தான் விஜயபாஸ்கர் பேசியது சரி என்று சொல்லிவிட்டேனே, நன்றி சொல்லி அமருங்கள்" என்று எடப்பாடி பழனிசாமியைப் பணித்தார்.

நல்லா பேசுனீங்க... கிளீனா பேசினீங்க... - எடப்பாடி பழனிசாமி அமர்ந்த பின்னர் மீண்டும் விஜயபாஸ்கரை சபாநாயகர் பேச அழைத்தார். "டாக்டர். இதை மட்டும் பேசி முடிங்க. 1984-ல் நுழைவுத் தேர்வு வந்தது என்று நீங்கதான் சொன்னீங்க. அதுக்கு அப்புறம் மத்திய அரசு நீட் கொண்டு வந்திருக்கு..." என்று சபாநாயகர் பேசிக்கொண்டிக்க, அவசரமாகக் குறுக்கிட்டார் அமைச்சர் துரை முருகன். ‛நீங்களே... காலி பண்ணிடுவீங்க போலவே...’ என்று துரைமுருகன் கூற, தனது பேச்சை அப்பாவு முடித்துக்கொண்டார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி, ‛‛டாக்டர் போதும். நல்லா பேசுனீங்க. கிளீனா பேசுனீங்க. பலமுறை பாராட்டியிருக்கேன். இதோட முடிங்க..." எனக் கோரினார். மீண்டும் விஜயபாஸ்கரை பேசுமாறு அழைத்த சபாநாயகர், "ஆளுநர் திருப்பி அனுப்பியதை மட்டும் பேசுங்கள்" என்றார். விஜயபாஸ்கர் பேச்சைத் தொடர்ந்தார். விஜயபாஸ்கர் பேச்சின்போதுதான் பிடிஆர், மாசு, துரைமுருகன், செல்வப்பெருந்தகை எனக் குறுக்கீடுகளும் சுவாரஸ்யங்களும் நிரம்பி காணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x