Published : 08 Feb 2022 11:45 AM
Last Updated : 08 Feb 2022 11:45 AM

கடம்பூர் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வான சுயேச்சை வேட்பாளர்கள் சான்றிதழ் கோரி போராட்டம்: தேர்தல் ரத்தானதால் ஏமாற்றம்

கோவில்பட்டி: கடம்பூர் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வான சுயேச்சை வேட்பாளர்கள் சான்றிதழ் வழங்கக் கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுருந்த நிலையில், கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1,605 ஆண் வாக்காளர்கள் 1,690 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3, 295 வாக்காளர்கள் உள்ளனர். இதனிடையே, 12 வார்டுகளில் போட்டியிட 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 1, 2 மற்றும் 11வது வார்டுகளில் தலா இருவர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னத்துரை ஆகியோரின் வேட்புமனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியானது என தெரியவந்ததால் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் திமுகவினரின் வேட்புமனுக்கள் உள்பட 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து சுயேச்சை வேட்பாளர்களான 1-வது வார்டில் நாகராஜா, 2வது வார்டில் ராஜேஸ்வரி மற்றும் 11வது வார்டில் சிவகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. இந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று ஒருவர் வேட்புமனு வாபஸ் பெற்றார். இதனால், தேர்தல் களத்தில் 26 பேர் போட்டியிட இருந்தனர்.

நேற்று மாலை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் 1, 2, 11 வார்டுகளைத் தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதையடுத்து 1, 2 மற்றும் 11 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் தங்கள் பகுதி மக்களுடன் இணைந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரி தரப்பில் இருந்து முறையாக பதில் கிடைக்காததால் வேட்பாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தேர்தல் அலுவலகப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கடம்பூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால் கடம்பூர் பேரூராட்சிக்கான அனைத்து வார்டுகளிலும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான மாநில தேர்தல் ஆணையத்தில் உத்தரவு நகல் தேர்தல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதையடுத்து காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை நீடித்த சுயேச்சை வேட்பாளர்களின் 13 மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x