Published : 07 Feb 2022 08:30 AM
Last Updated : 07 Feb 2022 08:30 AM
சேலம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சேலம் பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சேலம் பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலுக்கு நேற்று சென்று சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
பின்னர், சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்ற பேரூராட்சி மற்றும் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தான் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 9 பேர் மருத்துவப் படிப்புக்கு உள் ஒதுக்கீடு மூலம் பயன் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், இதை தாங்கள் சாதனை செய்து விட்டதாக திமுகவினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். திமுகவின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அம்மாப்பேட்டையில் நடைபெற்ற சேலம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பழனிசாமி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT