Published : 04 Feb 2022 09:12 AM
Last Updated : 04 Feb 2022 09:12 AM
சென்னை: கடந்த 2019 ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8,527 பேர் டெங்கு காய்ச்சலால் பெரிதும் பாதிக்கபபட்டனர்.
அதேவேளையில், 2020-ம்ஆண்டில் டெங்கு பாதிப்பு விகிதம்ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்துஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஆண்டில், தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் குணம் அடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 6,039 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று 150-க்கும்மேற்பட்டோர் சிக்குன் குனியாவிலும், 500-க்கும் அதிகமானோர் மலேரியாவிலும், 1,028 பேர் லெப்டோஸ்பிரோசிஸ்எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 2,220 பேர்ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றுக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் 1,025 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவை, தேனி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்குஅடுத்தபடியாக திருச்சி, சங்கரன்கோவில், மதுரையில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியாஉள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT