Published : 04 Feb 2022 08:36 AM
Last Updated : 04 Feb 2022 08:36 AM
சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்குஅளிக்கும் வகையில், தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் நேற்று திருப்பி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக வளர்ச்சிக்கும், தமிழக அரசுக்கும் தடையாக ருப்பார் என ஏற்கெனவே தெரிவித்தேன். நீட் தேர்வு விலக்குமசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு சொல்வதை மத்திய அரசுக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் கடமை. இந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரியலூர் மாணவி இறப்பில் பாஜக அரசியல் செய்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக மக்களின் உணர்வுக்கு எதிரானது. ஆளுநரின் இந்த அணுகுமுறை சமூக நீதி கேட்கும் மக்களை ஆத்திரமூட்டும். கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்கும் தமிழக அரசின் மீது மோதல் போக்கை உருவாக்கும் ஆளுநரின் அத்துமீறலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது.
தமிழக மாணவர்களின் நலனையும், சமூகநீதிக் கொள்கை நடைமுறையையும் உறுதி செய்ய தமிழக அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டம் கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது.
எனவே, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்குஅனுப்ப வேண்டும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: நீட் தேர்வு தொடர்பான முடிவால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. நீட் தேர்வு மசோதாவை மீண்டும்ஆளுநருக்கு அனுப்பி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு ஏற்படுத்த வேண்டும். அல்லது நீட் தேர்வு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவு கிடைக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒப்பாகும்.ஆளுநரின் முடிவு ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படும் தமிழக ஆளுநர் வி.என்.ரவியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஏறத்தாழ 4 மாதங்கள் காலதாமதம் செய்து, மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயல்கிறாரோ என சந்தேகம் ஏற்படுகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும்,கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்காத ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி மாநிலச் செயலர் முரளி அப்பாஸ்: நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஆளுநர் அவமதித்து விட்டார். ஆளும் கட்சிக்கெதிரான மோதல் போக்கை,மக்களுக்கு எதிரான மோதல் போக்காக மாற்றி தமிழகத்தின் கோபத்துக்கு ஆளுநர் ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT