Published : 03 Feb 2022 08:40 AM
Last Updated : 03 Feb 2022 08:40 AM
சென்னை:இடஒதுக்கீட்டை எதிர்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரை சமூகநீதிக்காக குரல் கொடுக்குமாறு மு.க.ஸ்டாலின் அழைப்பது வரலாற்றுப் பிழை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
‘நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடும் மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும்’ என்று சமூகநீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம் வியப்பை அளிக்கிறது. மண்டல் ஆணையத்தை நிறுவியதற்கும், இந்த கடிதத்தை எழுதியுள்ள மு.க.ஸ்டாலினின் திமுகவுக்கும், கடிதத்தை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கடந்த 1979-ம் ஆண்டு பாஜக தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் அமைச்சர்களாக அங்கம் வகித்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில்தான் மண்டல் ஆணையம் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததை மறைத்து அல்லது மறந்து மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கிறார்.
மேலும், 1980-ம் ஆண்டே மண்டல் ஆணைய பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் 1984 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தும் மண்டல் ஆணையத்தை நிறுவாதது ஏன் என்பதற்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா? 1989 நாடாளுமன்றத் தேர்தலில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்துவோம்’ என்று வாக்குறுதி அளித்த ஒரே கட்சி பாஜகதான். பாஜக ஆதரவு பெற்றதாலேயே வி.பி.சிங் அரசு மண்டல் ஆணையத்தை கொண்டு வந்து சட்டமாக்க முடிந்தது என்பதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?
இடஒதுக்கீடு தேசத்தை பிளக்கும் என்று நாடாளுமன்றத்தில் மண்டல் ஆணைய இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து இரண்டரை மணி நேரம் வாதம் செய்த அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி என்பதை மறந்துவிட்டு, அவரின் மனைவி சோனியாவுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் அதிகாரத்துக்காக இடஒதுக்கீட்டை மறந்த திமுக,இடஒதுக்கீட்டை மறுத்த, எதிர்த்த, வெறுத்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமூகநீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பது வரலாற்றுப் பிழை. இரட்டை வேடத்தோடு கூடிய போலி நாடகத்தை அரங்கேற்ற ஸ்டாலின் முனைகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT