Published : 31 Jan 2022 05:02 PM
Last Updated : 31 Jan 2022 05:02 PM

எதிர்காலத்தில் பாஜக உடனான கூட்டணியை அதிமுகவே முடிவு செய்யும்: ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை: எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றும், இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதேவேளையில், '2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும்' என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இருந்தது, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இதில் கூட்டணி இல்லை. பாஜக தனியாக நிற்கிறது. எங்களது தலைமையில் சில கட்சிகளுடன் சேர்ந்து நாங்களும் மக்களை சந்திக்க இருக்கிறோம்.

எதிர்வரும் காலத்தில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதேபோல் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அவர்களுடைய விருப்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விருப்பத்தை கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். எதிர்காலம் குறித்து எங்களது கட்சியே முடிவு செய்யும்.

2016 தேர்தலில் அதிமுக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனியாகத்தான் நின்றது. அந்தத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை அதிமுக பெற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்தது. 1972-ல் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, 1977-ல் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் இன்று அந்த இருபெரும் தலைவர்கள் இல்லை, அவர்களின் நல்லாசி உள்ளது. எங்களுடைய வெற்றி சின்னம், இரட்டை இலைச் சின்னம், மேஜிக் சிம்பல். அது எங்களிடம் உள்ளது. இவ்வளவு பிளஸ் பாயின்ட், அதுதவிர அதிமுக ஆட்சியின் சாதனைகள், அதை எல்லாம் மக்கள் இன்று நினைத்துப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 கொடுத்தோம். பொங்கல் பரிசுத் தொகுப்பில் புகார்களே இல்லை. சட்டம் - ஒழுங்கு நன்றாக இருந்தது, காவல்துறைக்கே பாதுகாப்பு இருந்தது. ஆனால், காவல்துறைக்கே இப்போது பாதுகாப்பு இல்லை. அதுமட்டுமல்ல, எம்.எல்.ஏ. அடாவடித்தனம், கடலூரில் எம்.பி. மேல ஒரு கொலை வழக்கு, அதேபோல கார்ப்பரேஷன் தேர்தல் நடக்கவுள்ளது, அங்கு வந்து எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், உதவிப் பொறியாளரைத் தாக்கி, ஒப்பந்ததாரரை தாக்கி, அடாவடித்தனத்துக்கு அளவே இல்லை. விளாத்திக்குளத்தில் ஒரு எம்.எல்.ஏ. சோலார் பவர் போட்டவர்களை மிரட்டியுள்ளார். அடாவடித்தனம், கட்டப்பஞ்சாயத்து, இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

சிங்கம் சிங்கிளாகத்தான் வரும், அதிமுக சிங்கம். அதனால் அந்த சிங்கம் வந்து வெற்றி பெறும். மற்றதெல்லாம் எப்படியும் கூட்டமாகத்தான் வரும். எங்களைப் பொறுத்தவரை வரலாறு இருக்கு, தனியாக நின்று ஜெயித்த வரலாறு இருக்கு. அந்த சிங்கத்துடைய வரலாறுதான் எங்களுடைய வரலாறு. சிங்கிளாகவே வந்து சில கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம்" என்று ஜெயக்குமார் கூறினார்.

வாசிக்க > அதிமுகவுடன் கூட்டணி இல்லை; பாஜக தனித்துப் போட்டி: அண்ணாமலை அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x