Published : 31 Jan 2022 01:59 PM
Last Updated : 31 Jan 2022 01:59 PM

அதிமுகவுடன் கூட்டணி இல்லை; பாஜக தனித்துப் போட்டி: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுகவுடனான இந்தக் கூட்டணி முறிவுக்கு நயினார் நகேந்திரன் பேச்சு காரணம் இல்லை. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "மிக கடினமான வேலை என்பது கூட்டணியில் ஒரு பங்கீட்டை ஏற்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தி, அனைத்து கட்சிகளுடன் கூட சந்தோஷமாக இருப்பதற்கு, கஷ்டமான ஒரு விஷயம்தான் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை. இதற்குமுன் தொடர்ச்சியாக அதிமுக அதன் தலைவர்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து உந்து சக்தியாக இருந்து வந்துள்ளது. சட்டப்பிரிவு 360, விவசாய சட்டங்கள் உள்ளிட்ட நம் நாட்டில் பிரதமர் கொண்டு வந்த அனைத்து முக்கிய முடிவுகளுக்கும் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர்.

2021-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தனது முழு ஒத்துழைப்பைக் கொடுத்து, இபிஎஸ் மீண்டும் முதல்வராக ஒத்துழைப்பு கொடுத்து நாங்கள் தொடர்ந்து உழைத்தோம். அதன்பின்னர் நடந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணி உடன்படிக்கை மேல்மட்ட அளவில் எடுபட்டாலும்கூட, கீழ்மட்டத்தில் நடைமுறைபடுத்துவது மிகுந்த சிரமமாகிவிட்டது. இப்போது நடக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பாஜக தலைவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுகவின் முக்கிய தலைவர்களிடம் பேசி, குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஸிடம் பேசிவிட்டு வந்தோம்.

பாஜகவை பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு கட்சி. கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கூட, உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து வேலை செய்யக்கூடிய கட்சி. நிறைய இடங்களில் போட்டியிட விரும்புகின்றனர். எங்கள் கட்சியின் தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்பது மாநில தலைமையின் முக்கியமானதொரு முடிவு. மாநில தலைமையின் முடிவை அகில இந்திய தலைமையும் கூட ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

அதன் பின்னர்தான் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாஜக தொண்டர்கள் நிற்க வேண்டும், தலைவர்கள் நிற்க வேண்டும், கட்சியினர் நிற்க வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில் ஒரு பெரிய கட்சியாக இருக்கின்ற அதிமுகவும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.

இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்பு, முக்கிய முடிவு எடுத்துள்ளோம். இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறோம். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை அனைத்து இடத்திலும் நிறுத்தப் போகிறோம். அதேநேரத்தில் அதிமுகவுடன் இரண்டு தலைவர்கள், முக்கியமான தலைவர்கள், நான் நேசிக்கக்கூடிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அண்ணன் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியபடி, நம்முடைய கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்திருக்கும். அகில இந்திய அளவில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர்ந்திருக்கும், முக்கியமான விஷயங்களில் நம் நிலைப்பாடு ஒன்றாக இருக்கும்.

தமிழகத்தில் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பாஜக தனித்துப் போட்டியிடும். இன்னும் சற்று நேரத்தில் எங்கள் கட்சியின் சார்பில், முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போகிறோம். பாஜக தொண்டர்களுக்கு தமிழகத்தில் தாமரையை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்வதற்கு இதுவொரு வாய்ப்பு. அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது நிலைப்பாடு அதற்காக உழைப்போம்.

இது கடினமான முடிவென்று சொல்ல மாட்டோம், தொண்டர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு. இந்த முடிவுக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை ஏற்றுக்கொண்டு முழு மனதோடு எங்களுக்கு இந்த சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். வரும் நாட்களில் பாஜக அதிமுக நல்லுறவு தொடரும். தேசிய ஜனநாயக கூட்டணி அகில இந்திய அளவில் தொடரும். 2024-லும் நம்முடைய கூட்டணி தொடரும் அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

கடந்த முறை 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 8 மாவட்டங்களில் உடன்பாடு ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை அதனால், அங்கு தனியாக நின்றோம். கடந்தமுறை பாஜக 9.1 சதவீத இடங்களில் போட்டியிட்டது. இந்தமுறை அதிமுகவின் தலைவர்கள், முக்கியமான தலைவர்கள் பாஜகவுக்கு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 10 சதவீத இடங்களை ஒதுக்கியிருந்தார். நாங்கள் அதிகமாக கேட்டிருந்தோம். எங்கள் தரப்பு பட்டியலை கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் அதிமுக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை, அவர்களால் கொடுக்க முடியாத சூழலும் இருந்தது.

இதனைத்தொடர்ந்து பாஜக தலைமைக்கு இந்த தகவலை தெரிவித்து, தொண்டர்களின் விருப்பத்தைக்கூறி இந்த முடிவை எடுத்துள்ளோம். நயினார் நகேந்திரன் அதிமுக குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். பாஜக அடுத்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். 10 சதவீத இடங்களுக்கு மேல் போட்டியிட வேண்டும். அதிமுக தலைவர்கள் மீது எந்தவொரு சிறு வருத்தமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நாங்கள் விரும்பக்கூடிய தலைவர்கள், மிக திறமையாக கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடினமான சூழலில் கூட திறமையாக கட்சியை வழிநடத்திக் கொண்டுள்ளனர்" என்றார் அண்ணாமலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x