Published : 16 Apr 2016 02:46 PM
Last Updated : 16 Apr 2016 02:46 PM

பாஜக பெறும் வாக்குகளால் அதிமுக முகாமுக்கு பாதிப்பு: குமரியில் திமுக கூட்டணி உற்சாகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாஜக, பலமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், அதிமுக வாக்குகள் சிதறும் என்பதால், திமுக கூட்டணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி குமரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகம் ஈர்ப்பது வழக்கம். அதேவேளை பாஜக வேட்பாளர்கள் பெறும் வாக்குகள், அதிமுகவின் வெற்றியை பாதித்து, திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என்பது கடந்த பல தேர்தல்களில் நிரூபணமான உண்மை.

இந்துக்களின் வாக்குகளை அதிமுகவும், பாஜகவும் பங்கு போட்டால், சிறுபான்மை வாக்குகள் தமக்கே கைகொடுக்கும் என திமுக கணக்கு போடுகிறது. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவுக்கு நல்ல வாக்குவங்கி உள்ளது. அதேவேளை இங்குள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் பாஜக எடுக்கும் வாக்குகள் அதிமுகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். திமுக தன்னுடைய இயல்பான வாக்கு வங்கியை தக்க வைக்க வியூகம் வகுத்து வருகிறது.

பத்மநாபபுரம், குளச்சல் தொகுதிகளிலும் இந்துக்களின் வாக்குகளை மட்டுமே குறிவைத்து களத்தில் வேகமெடுத்துள்ளது பாஜக. இது அதிமுகவுக்கே பின்னடைவைத் தரும். திமுகவுக்கு எதிர்ப்பு என்ற நிலையோடு, பாஜகவுக்கும் மாற்று என்பதையும் அதிமுக விதைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதே நேரத்தில் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் அதிமுகவுக்கு பெரிய அளவிலான வாக்கு வங்கி ஏதும் இல்லை. இங்கு, பாஜக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் தான் போட்டி இருக்கும். மாவட்டத்தில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்துக்கு வந்துள்ளது பாஜக. இருந்தும் அதனை வெற்றியாக எப்படி பாஜக மாற்றப்போகிறது என்பதில்தான் அதன் பிரச்சாரம் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x