Published : 29 Jan 2022 07:14 AM
Last Updated : 29 Jan 2022 07:14 AM

சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு: ரூ.6 கோடியில் 6,000 சிசிடிவி கேமராக்கள் வாங்க திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய சுமார் ரூ.6 கோடி மதிப்பில் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை வாங்க மாநகாரட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே வாக்குச்சாவடி பட்டியல், வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை இல்லாததால், குறைவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே தேவைப்படும் நிலை உள்ளது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகள், மணலியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த நீதிமன்றம், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடவடிக்கைகளை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்யுமாறும் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சிசிடிவி கேமராக்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண்கள், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண்கள், 1576 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளன. வாக்குப்பதிவுக்காக 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் தேர்தலில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்ய ரூ.5.88 கோடி மதிப்பில் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், கேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள், வாக்குச்சாவடிகள், வாக்குகள் பதிவான பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், உதவி வருவாய் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இவை பொருத்தப்பட உள்ளன. அனைத்து நிகழ்வுகளையும், மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிடும் வசதிகளும் ஏற்படுத்தப்படும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x