Published : 27 Jan 2022 12:05 PM
Last Updated : 27 Jan 2022 12:05 PM
சென்னை: "அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நாட்டின் 73-ஆவது குடியரசு நாள் விழாவை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் விடுதலை வீரர்கள், தலைவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து இருந்தார். இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பி பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக ஆயுதம் தரித்துப் போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தியாகத்தையும், அவரது படையில் அணிவகுத்த தமிழர்களின் வீரத்தையும் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழக அரசின் பணிகளை பாராட்டியுள்ள ஆளுநர், பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும் தமிழகம் இருக்கிறது என்பதையும் தமது அறிக்கையில் ஆளுநர் சிறப்பித்து கூறியிருக்கின்றார்.
ஆனால், ஆளுநரின் அறிக்கையை முழுமையாக ஆழமாக உள்வாங்கினால்தான் தெரிகிறது, மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும், அதற்கு பின்னணியில் இருந்து இயக்கி வரும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கருத்துகள் இருக்கின்றது என்பது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். எந்த தத்துவத்தின் சாயலும் ஆளுநர் மீது படர்ந்து விடலாகாது. ஆனால் தமிழக ஆளுநரின் வாழ்த்துச் செய்தி அந்த எல்லைகளை கட்டறுத்து தாண்டி இருப்பதை ஏற்க முடியாது.
உலகப் பொதுமறை 'திருக்குறளை' வேத சட்டகத்தினுள் அடைக்க முயற்சிப்பதையும் தமிழர்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள். மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' கட்டாயம் என்பதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும் கூட ஆளுநர் 'நீட்' விலக்கு சட்ட முன்வரைவுக்கு இசைவு அளித்து மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பவில்லை. இந்நிலையில் 'நீட்' தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அண்ணா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்தை அரை நூற்றாண்டு காலமாக தமிழகம் கடைபிடித்து வரும் நிலையில், தமிழக மாணவர்கள் இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்று, இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலையும் ஆளுநர் வழங்கி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT