Published : 27 Jan 2022 08:40 AM
Last Updated : 27 Jan 2022 08:40 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் திசை திருப்புவது வருத்தம் அளிக்கிறது என பள்ளியின் சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தூய இருதய மரியன்னை சபையின் தலைவி பாத்திமா பவுலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூய இருதய மரியன்னை சபை, கடந்த 180 ஆண்டுகளாக கல்விப்பணி செய்து வருகிறது. இச்சபையின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் 160 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி தொடங்கப்பட்டது. மாணவிகளின் நலன் கருதி 90 ஆண்டுகளாக விடுதியும் செயல்படுகிறது.
பெண் கல்வியிலும், பெண் விடுதலையிலும் சபையின் பங்களிப்பு முதன்மையானது. எங்களிடம் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும், சமூகத்தையும் சார்ந்தவர்கள். அச்சூழலில் அனைவருக்குமான சமயச் சார்பற்ற கல்வியை அளித்து வருகிறோம். எவரின் மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை. அனைவரது நம்பிக்கையையும் பெரிதாக மதிக்கிறோம்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதிஉயிரிழந்த மாணவிக்கு பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். மாணவியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் விடுமுறை நாட்களில் கூட வீட்டுக்குச் செல்லாமல், எங்களுடன் தங்குவதையே விரும்பியவர். எங்கள் அனைவருக்கும் பிள்ளையாகவே வளர்ந்தார்.
கடந்த 19-ம் தேதி உயிரிழந்த மாணவி, தன்னுடைய இறுதி வாக்குமூலத்தில், விடுதிக் காப்பாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். போலீஸாருக்கும், கல்வித் துறைக்கும், சட்ட விசாரணைகளுக்கும் எப்போதும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். அதே சமயம், இச்சம்பவத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுத்து திசை திருப்புவதும், பொய்களை விதைப்பதும், எங்களை அவதூறு செய்வதும் பல வழிகளில்தொடர்வது வருத்தமாக உள்ளது.
எங்கள் சபை மீது இதுபோன்ற குற்றச்சாட்டு இதுவரை எழுந்ததுஇல்லை. ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையை, சுதந்திரத்தை,தனித்தன்மையை பெரிதும் மதிக்கிறோம். மதமாற்ற நடவடிக்கை என குற்றம் சாட்டுவதற்கு எங்கள்நிறுவனங்களில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT