Published : 05 Apr 2016 03:20 PM
Last Updated : 05 Apr 2016 03:20 PM

மதுரை மேயருக்கு அதிமுகவில் எம்எல்ஏ சீட் கிடைக்காதது ஏன்?- கட்சியினர் பரபரப்பு தகவல்

மதுரை புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளரும், மேயருமான ராஜன் செல்லப்பாவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரை அதிமுகவில் அமைச்சர் செல்லூர் ராஜுவும், மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவும் தனித்தனி அணியாக செயல்பட்டனர். ஆரம்பத்தில் கட்சியில் செல்லூர் ராஜு செல்வாக்கே ஓங்கியிருந்தது. பிறகு மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனதும், அமைச்சரையே ஓரங்கட்டும் அளவுக்கு மதுரை அதிமுகவில் செல்வாக்கு பெற ஆரம்பித்தார்.

அடுத்த கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட பெரும் முயற்சி மேற்கொண்டார். அதற்காகவே அவர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றதாகக் கூறப்பட்டது. அதற்கேற்றவாறு ராஜன் செல்லப்பாவும், தனக்குதான் சீட் என்பதுபோல் திருபரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார். திருப்பரங்குன்றம் பகுதியில் கட்சி நிகழ்ச்சிகள், தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வந்தார்.

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் திருப்பரங்குன்றம் பகுதிக்கு கடைசி நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்தார். இந் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு பதில், முன்னாள் எம்எல்ஏ சீனிவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேயரும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

மாநகராட்சி கூட்டங்களில் அதிமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள், மேயரை பகிரங்கமாகவே, நீங்கள் இந்த முறை கண்டிப்பாக எம்எல்ஏவாகி, அமைச்சராகிவிடுவீர்கள், என அவரை புகழ்பாடி வந்தனர். இதை மேயர் கண்டிக்காமல் இருந்ததால் அதை ஆமோதிப்பதுபோல் இருந்தது. இந்த புகழ்பாடிய பேச்சு, கட்சித் தலைமைக்கு ஆதாரத்துடன் சென்றது.

மேலும், இவரால் புறநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், எம்எல்ஏ ஒருவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கூட்டாக எங்களுக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மேயருக்கு கிடைக்க கூடாது என்பதற்காக, அவரது கடந்த கால அரசியல் வாழ்க்கை (ஜானகி அணி) பற்றிய சில உண்மைகள், மாநகராட்சியில் நடைபெற்ற சில உள்விவகாரங்களை புகாராக அனுப்பியுள்ளனர். இந்த விஷயங்களால் மேயருக்கு சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது என அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x