Published : 26 Apr 2016 08:54 AM
Last Updated : 26 Apr 2016 08:54 AM

நட்சத்திர தொகுதி: மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக களமிறங்கியுள்ள கொளத்தூர்

கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது தமிழகத்திலேயே அதிக வாக் காளர்களைக் கொண்ட வில்லி வாக்கம் தொகுதியை பிரித்து கொளத்தூர் தொகுதி உருவாக் கப்பட்டது. புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும் இதில் சேர்க் கப்பட்டுள்ளன. கொளத்தூர், பெரவள்ளூர், செந்தில் நகர், சீனிவாச நகர், அயனாவரம், பெரியார் நகர், பூம்புகார் நகர், ஜவகர் நகர், செம்பியம் ஆகிய பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

கொளத்தூரில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் மிக அதிகமாக வசிக்கின்றனர். புதி தாக வளர்ச்சியடைந்த புறநகர் பகுதி என்பதால் வெளிமாவட்ட, வெளிமாநில மக்களும் கணிச மான எண்ணிக்கையில் உள்ளனர். தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களை குறிவைத்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.

மழைக் காலங்களில் கொளத் தூர் மிகப்பெரிய பாதிப்பை எதிர் கொண்டு வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல், கொசுத் தொல்லை என வட சென்னைக்கே உரித்தான பிரச்சினைகள் இங்கும் உண்டு. ஒரு காலத்தில் வட சென்னையின் அடையாளமாக இருந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) இத்தொகுதிக்குள்தான் இருக்கிறது. ஐசிஎப் தொழிலா ளர்களில் கணிசமான வாக்காளர் கள் வெளி மாநிலத்தவர்கள். குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இவர் களின் வாக்குகளைப் பெறவும் அரசியல் கட்சிகள் போட்டி போடுகின்றன.

முதல் எம்எல்ஏ ஸ்டாலின்

முதல்முறையாக கடந்த 2011-ல் தேர்தலை சந்தித்த கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி களமிறக்கப்பட்டார். இதனால் தமிழகத்தின் மிக பரபரப்பான தொகுதியாக மாறியது. ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று கொளத்தூர் தொகுதியின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றார். சைதை துரைசாமி 65 ஆயிரத்து 943 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் 4 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாலும் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார் ஸ்டாலின். கொளத்தூர் தொகுதியில் தற்போது 1 லட்சத்து 29 ஆயிரத்து 587 ஆண்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 273 பெண்கள், திருநங்கைகள் 53 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 913 வாக்காளர்கள் உள்ளனர்.

பலமுனைப் போட்டி

இந்த தேர்தலில் இங்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் தற்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மதிவாணன் (தேமுதிக), கே.டி.ராகவன் (பாஜக), எஸ்.கோபால் (பாமக), சேவியர் பெலிக்ஸ் (நாம் தமிழர் கட்சி) ஆகியோரும் போட்டியிடுகின்றனர். ஸ்டாலின் போட்டியிடுவதால் கொளத்தூர் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x