Published : 21 Jan 2022 02:46 PM
Last Updated : 21 Jan 2022 02:46 PM

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்; மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு: திருமாவளவன் கண்டனம்

சென்னை: இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வது மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில் ”ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 இல் விதி-6 குறிப்பிடுகிறது.

இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என விதி-6 இல் திருத்தம் செய்வதற்கு பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். அதுமட்டுமின்றி எப்போது நம்மை டெல்லிக்கு மாற்றல் செய்வார்களோ என இந்த அதிகாரிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதாகவும் இருக்கும். மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் இது கருவியாக அமைந்துவிடும். எனவே இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு இந்திய மத்திட அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளும் இதற்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும்
கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x