Published : 21 Jan 2022 01:58 PM
Last Updated : 21 Jan 2022 01:58 PM

இந்தியா கேட்டில் நேதாஜிக்கு பிரமாண்ட சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடந்த 1971 ம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக டில்லி இந்தியா கேட் பகுதியில், 1972 ஜனவரி 26 அன்று அமர்ஜவான் ஜோதி அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இங்கு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுடன் நடந்த போர் முதல் தற்போது வரை நடந்த போர்களில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த சின்னம் அமைக்கப்பட்டதுடன் அவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு, தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுகிறது. இரண்டு அணையா விளக்குகளும் ஒன்று சேர்க்கப்படுகிறது என ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் இவ்வேளையில், கிரானைட் கற்களால் ஆன அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவருக்கு இந்தியா கடமைப்பட்டுள்ள நிலையில் அதன் அடையாளமாக இந்த சிலை இருக்கும்.

நேதாஜி போஸின் பிரமாண்ட சிலை தயாராக உள்ளது. இந்த சிலை இந்தியா கேட்டில் வைக்கப்படும். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி சிலையை நான் திறந்து வைப்பேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x