Published : 09 Apr 2016 09:21 AM
Last Updated : 09 Apr 2016 09:21 AM

கட்சியினர் மத்தியில் புகைச்சல்: கிறு கிறுக்கும் கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர்கள்- ஓர் அலசல் ரிப்போர்ட்

அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியல் அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, பர்கூர், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தம்பிதுரை தேசிய அரசியலுக்கு சென்ற பிறகு, கே.பி.முனுசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு கே.பி.முனுசாமி மறைமுகமாக உதவி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, கே.பி.முனு சாமியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். மேலும், கே.பி.முனுசாமி, கடந்த 2006-ல் நடந்த தேர்தலின்போது உள்ளூர் திமுக நிர்வாகி செங்குட்டுவனுக்கு மறைமுகமாக வேலை பார்த்தார் என்ற புகாரும் உள்ளது.

இதுபோன்ற புகார்கள் உள்ள நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.பி.முனுசாமி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

பாமக-வுக்கு செல்வாக்குள்ள பென்னாகரத்தில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி களமிறங்க திட்டமிட்டுள்ளார். எனவே கே.பி.முனுசாமி பாமக-வுடன் நேருக்குநேர் மோதி வென்று, தனது பலத்தை நிரூபிக்கட்டும் என அதிமுக மேலிடம் முடிவெடுத்துள்ளது என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

கிருஷ்ணகிரியில் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜ், அக்கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த 1977-ல் இருந்து கட்சியில் உள்ள இவர், கடந்த 2001-ம் ஆண்டு கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது கே.பி.முனுசாமியுடன் மோதல் ஏற்பட்டு, தம்பிதுரையின் ஆதரவாளராக மாறினார்.

இந்நிலையில் கே.பி.முனுசாமி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவிந்தராஜ் ஓரம்கட்டப் பட்டார். மக்களவை தேர்தலுக்கு பிறகு கே.பி.முனுசாமியின் அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டது. எனவே மீண்டும் மாவட்ட செயலாளராக கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டார்.

தற்போது கிருஷ்ணகிரி தொகுதியில் சீட் வழங்கியதற்காக பட்டாசு வெடித்த அதிமுகவினர், கே.பி.முனுசாமி பென்னா கரம் தொகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதை கொண்டாடும் விதமாக கூடுதலாக பட்டாசு வெடித்தனர். கிருஷ்ணகிரி பகுதியில் உள்ளாட்சியில் அதிகம் உள்ள முனுசாமி யின் ஆதரவாளர்கள் அவருக்கு ஒத் துழைப்பு தருவார்களா என்பது சந்தேகம். இதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்கின்றனர் கட்சியினர்.

ஓசூரில் 'வழக்கு' வேட்பாளர்

ஓசூர் தொகுதியில் போட்டியிட நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி, கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, ராமு, புஷ்பா சர்வேஸ் உள்ளிட்டோர் சீட் கேட்டனர். இறுதியில் அதிமுக தலைமை பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சீட் வழங்கியுள்ளது. தொடக்கத்தில் பாஜக வில் இருந்த இவர், கடந்த 2001-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். கே.பி.முனுசாமி ஆதரவாளராக இருந்த இவர், பின்னாளில் தம்பிதுரையின் ஆதரவாளராக மாறினார்.

ஓசூரை அடுத்துள்ள பாகலூர் பகுதி யில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டார். அப்போது, சமாதானம் செய்ய முயன்ற போலீஸாரின் வாகனம் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் எரிக்கப்பட்டன. இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, பாலகிருஷ்ணா ரெட்டி மீது 2002-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நில அபகரிப்பு, பொதுச்சொத்து ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் ஓசூர் நகராட்சி தலைவராக சிறப்பாக செயல்படாத நிலையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது வழக்கை மறைத்து, கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்து சீட் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

ஓசூர் தொகுதியில் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் அதிகமாக வசிப்பதால், காங்கிரஸை சேர்ந்த கோபிநாத் தொடர்ந்து 3 முறை வென்றுள்ளார். இதுவரை அதிமுக வெற்றிபெறாத ஓசூரில், வெற்றி பெற கடும் போராட்டம் நடத்த வேண்டும் என்கின்றனர் கட்சியினர்.

ஊத்தங்கரையில் எதிர்ப்பு

ஊத்தங்கரை தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊத்தங்கரை அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பக்கம் தலைக்காட்டாத இவரை மாற்ற வேண்டும் என போயஸ் கார்டனுக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் வசிக்கும் மனோரஞ்சிதம் நாகராஜிக்கு பதிலாக உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி தொகுதிக்கு, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் மது(எ)ஹேமநாத் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை முனிசந்திரப்பாவுக்கு சூளகிரி வட்டாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், சீட் வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் திமுகவில் இருந்த இவர், அதிமுகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தம்பிதுரையுடன் நெருக்கம் காட்டும் இவருக்கும், முனுசாமி ஆதரவாளர்கள் ஆதரவு சந்தேகமே. அதிமுகவினரின் உட்கட்சி பூசல், எதிர்க்கட்சிக்கு வெற்றியை தாரை வார்த்திடுமோ என்கிற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தளி தொகுதி நிலவரம்

தளி தொகுதி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால் இடதுசாரிகளும், காங்கிரஸூம் அந்தந்த மொழிகளைப் பேசி, கணிசமான வாக்குகளை பெறுகின்றனர். தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள நாகேஷ் தேன்கனிக்கோட்டை பேரூராட்சித் தலைவராக உள்ளார். தம்பிதுரையும், கே.பி.முனுசாமியையும் பகைத்து கொள்ளாமல் கட்சியில் சுமுகமாக இருந்து வருகிறார். அதிமுக தொண்டர்களை அனுசரித்து, தீவிரமாக களமாடினால் மட்டுமே தளியில் அதிமுக கரைசேர முடியும் என்கின்றனர்.

பர்கூரில் உற்சாகம்

பர்கூரில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள சி.வி.ராஜேந்திரன், தம்பிதுரை யின் உறவினர். இந்த தொகுதியில் பழைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே இருக்கிறது. இருப்பினும் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் என தொண்டர்கள் உற்சாகமாக சொல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x