Published : 07 Jan 2022 03:11 PM
Last Updated : 07 Jan 2022 03:11 PM

நகைக் கடனில் நடந்த முறைகேடுகள் என்னென்ன?- அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

சென்னை: நகைக் கடனில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''5 பவுனுக்குக் கீழே எல்லாமே போலி நகைகளை வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள். காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல இடங்களில் நடந்திருக்கிறது. திருவண்ணாமலையில் மட்டும் மார்வாடி ரத்தன்லால் என்பவர் மட்டும் ஒரு ஆதார் அட்டையையும் குடும்ப அட்டையையும் வைத்து 5 பவுனுக்குக் கீழே 672 லோன்கள் வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு பல கோடி ரூபாய். இதுபோல பல குடும்பங்கள் 5 பவுனுக்குக் கீழே நகைகளை வைத்து நூற்றுக்கணக்கான லோன்களை வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தள்ளுபடி எப்படி கொடுக்க முடியும் என்று சட்டமன்றத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

புதுக்கோட்டை கீரனூரில் 102 நகைப் பைகளைக் காணோம். மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும். தூத்துக்குடியில் உள்ள குரும்பூர் கூட்டுறவில் பார்த்தால் 242 நகைப் பைகளைக் காணோம். மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய். நாமக்கல் மல்லைச்சமுத்திரத்தில் உள்ள கூட்டுறவில் போலி நகைகள். இப்படி பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. என்னுடைய ஆய்வின் மூலம் போலி நகைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோக பல முறைகேடுகள் நடந்துள்ளன. அதை எல்லாம் நான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். சட்டமன்றத்தில் விரிவாக விளக்கமாக எதிர்கட்சித் தலைவர் கேட்ட கேள்விகளுக்கு மிகத் தெளிவாக, தேர்தல் காலத்தில் அறிவித்த நகைக்கடன் 5 பவுனுக்குக் கீழே இருக்கின்ற அத்தனை பேருக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


இன்றைக்கு என்னவென்று கேட்டால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்திலே கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983-ல் திருத்தப்பட்டது. பின்னர் 2011-ல் ஒன்று திருத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தெளிவாக வந்திருக்கிறது. என்னவென்றால், அதாவது கூட்டுறவு சங்கங்களின் சட்டங்கள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதைத் தெளிவாக உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

கடந்த ஆட்சியில் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக இருந்ததை 5 ஆண்டுகளாக உயர்த்தினர். மேலும் 2018-ல் தேர்தலே நடத்தாமல் அறிவித்து எல்லாரும் பதவிக்கு வந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் எல்லாம் அதிமுகவினர்தான் இருக்கிறார்கள்.

பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் என்பது முழுக்க முழுக்க விவசாயிகளிடம்தான் துறை கொள்முதல் செய்திருக்கிறது என்பதை நான் அடித்துச் சொல்வேன். கூட்டுறவு பண்டக சாலை, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆங்காங்கே இருக்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து நேரடியாக விவசாயிகளிடம்தான் செல்கிறது. இங்கு தனியார், வியாபாரிகள், இடைத்தரகர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. எல்லா கூட்டுறவுத் துறையிலும் உங்கள் ஆட்கள்தான் இருக்கிறார்கள்.

நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் மீது குறைகளைக் கூற முடியவில்லை. எனவே குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் விவாதம் கூட செய்ய முடியாமல் வெளியில் வந்து பேட்டி கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

நாங்கள்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். எங்கு தவறு நடந்தாலும் யார் செய்தாலும் கட்டாயம் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். அதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதில் உறுதியாக இருக்கிறது. பலமுறை கூட்டங்கள் நடத்தி உணவு மற்றும் கூட்டுறவுத்துறைப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்றைக்கு இருக்கும் நியாய விலைக் கடையில் அரசினால் வழங்குகின்ற பொருட்களை 2 கோடி 15 லட்சம் ரேஷன் கார்டு உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். இன்றைக்கு பொங்கல் தொகுப்பு 21 பொருட்களை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இருக்கிறோம். எங்காவது தவறு நேர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x