Published : 07 Jan 2022 02:15 PM
Last Updated : 07 Jan 2022 02:15 PM

'பணபலத்தால் ஆளத் துடிக்கிறார் மம்தா; பிரசாந்த் கிஷோர் ஆட்டமே சீர்கேட்டிற்கு முக்கியப் புள்ளி' - மாணிக்கம் தாகூர் நேர்காணல்

சென்னை: "பணபலத்தால் ஆளத் துடிக்கிறார் மம்தா. அவருக்கு தேசிய அளவில் மக்கள் ஆதரவு என்பது கேள்விக்குறிதான்" என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

பாஜகவிற்கு மாநிலங்களின் ஆதரவு இன்றைய நிலையில் என்ன அளவில் உள்ளது என்பதை அறிய நடப்பாண்டில் இன்னுமொரு தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தராண்ட் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மாநிலக் கட்சிகளோடு சேர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் களம் காண்கிறது. மம்தாவின் தேசிய அரசியல் பிரவேசம் எத்தகையது, அது காங்கிரஸை பாதிக்குமா போன்ற கேள்விகள் சாதாரணமாகவே அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் 'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் சில பகுதிகள்:

5 மாநில தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக அரசியல் சூழல் மாறுவது போன்ற சூழல் இருக்கிறது. மம்தா பானர்ஜி கோவா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடிவு செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டுமே எதிர்க்கட்சி என்ற நிலை இல்லை, மாநிலக் கட்சிகள் இதை முன்னெடுப்பது போன்ற நிலை வருகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

"மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து 97-ல் தொடங்கிய இயக்கம். பாஜகவோடு சேர்ந்து 2 முறை ஆட்சி அமைத்திருக்கிறார்கள். உ.பி-யில் காங்கிரஸோடு சேர்ந்து 2 ஆண்டுகள் இருந்தார். பின்னர். காங்கிரஸ் கட்சியுடன் முதன்முறை கூட்டணி சேர்ந்தபிறகு, திரிணமூல் மேற்கு வங்கத்திலே வெற்றி பெற்றது. அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றபோது, காங்கிரஸ் தலைவர்கள் திரிணமூலிலிருந்து கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியதன் விளைவாக திரிணமூல் காங்கிரஸோடு காங்கிரஸ் கூட்டணி முடிவு பெற்றது. அதன்பிறகு மாநிலம் மாநிலமாக கட்சிக் கிளைகளை அனுப்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரை மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களா என்பது காலப்போக்கில்தான் தெரியும். அவர்களுக்கு இருக்கிற பணபலத்தால், கோவா போன்ற சிறு மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை எப்படி பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கலாம் என்ற சிந்தனை விளைகிறது. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும். கடந்த தேர்தலிலே திரிணமூல் கோவாவிலே பெரும் தோல்வியை ஏற்படுத்தியது என்பது வரலாறு. திரிபுராவிலும் மிகப்பெரும் தோல்வியை ஏற்படுத்தியது என்பது வரலாறு. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து, உழைக்க தயாராக இருக்கிறோம்.

நாடாளுமன்றத்திலே 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து, காங்கிரஸோடு தோளோடு தோள்சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இப்படி அனைத்துக் கட்சிகளும், நாடாளுமன்றத்திலே ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். திரிணமூல் காங்கிரஸ் இந்தமுறை நாடாளுமன்றத்திலே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளின் போராட்டத்திலே அவர்களும் சேர்ந்துகொண்டார்களே தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸை பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு சேர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகளோடும் சேர்ந்து, பாஜகவை தவிர மற்ற எதிர்க்கட்சிகளோடு இணைந்து உழைக்கத் தயாராக இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நல்ல மனதோடும், நல்ல சிந்தனையோடும் சேர்ந்து, மதசார்பற்ற இந்தியாவை, முன்னேற்றமுள்ள இந்தியாவை, வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கான பாதையிலே காங்கிரஸ் கட்சியின் பயணம் தொடரும். அந்தப் பயணத்திலே வந்து சேர்ந்துகொள்ளக் கூடியவர்கள் வந்து சேர்ந்துகொள்ளலாம். இதற்காக யாரையும் அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என்று சொல்கிறவர்களல்ல, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். எங்கள் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று இணைந்திருக்கக்கூடிய 14 கட்சிகளோடு சேர்ந்து பயணிக்கிறோம் நாடாளுமன்றத்திலே."

திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர மற்ற வேலைகளையும் பார்க்கிறார்கள்... மும்பையில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவை பார்த்திருக்கிறார்கள். தேசியவாதக் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார்கள். உ.பி-யில் அகிலேஷை சந்திக்கிறார்கள். அப்படியெனில் காங்கிரஸ் அல்லாத அல்லது எதிர்க்கட்சிகள் யார் தலைமையேற்பது போன்ற மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறதா? ஏனெனில் உ.பி-யில் காங்கிரஸ் தலைமையேற்றபோது அதற்குப் பின்னால் கட்சிகள் இணைந்தன. 96-ல் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன. காங்கிரஸ் பின்னாலிருந்து அதற்கு ஆதரவு தெரிவித்தது. 96 மாடலை விரும்புகிறார்களா?

"இந்தியா கடந்த 30, 40 ஆண்டுகளாக இருதுருவ அரசியலாக மாறிவிட்டன. இதில் ஒரு துருவத்திலே காங்கிரஸும், ஒரு துருவத்திலே பாஜகவும் சேர்ந்து செல்ல வேண்டிய நிலை வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கையில் மாற்றம் வந்ததோ, அவர்களைப் பொறுத்தவரை மதசார்பற்ற கூட்டணிக்கு வித்திடவேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டது. அவ்வகையில்தான் ஒரு துருவத்தில் காங்கிரஸும், இன்னொரு துருவத்தில் பாஜகவும் என இருதுருவ அரசியல் உருவானது. இதில் மூன்றாவது கூட்டணி என்பது மாநிலங்கள் அளவிலே இருக்கலாம். மக்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அந்த நிதர்சனமான உண்மையை அறிந்தவர்கள் இதைப் புரிந்துகொண்டு அதற்காக செயல்படுகிறார்கள்.

ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மும்பை செல்கிறார், ஹைதராபாத் செல்கிறார், இங்கு செல்கிறார், அங்கு செல்கிறார் என்பதெல்லாம் தலைப்புச் செய்தியில் வருவதற்காக அவர் செய்கின்ற செயல். ஆனால் இவர் யார் யாரை சென்று சந்திக்கிறாரோ, தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் சோனியா காந்தியின் அழைப்பின்பேரில் சென்று பார்க்கின்ற நிலையில்தான் இருக்கிறார்கள். மம்தா அவர்களைத் தேடி செல்கிறார். ஆனால், இவர் யாரை பார்க்கச் செல்கிறாரோ அவர்களெல்லாம் சோனியாவை சந்திக்க டெல்லி வருகிறார்கள். சோனியா காந்தி 15 ஆண்டு கால அரசியலில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் மிகவும் திறமை படைத்தவர். தாராள மனம் கொண்டவர். அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்துகொள்ளக்கூடியவர். தனக்காக பதவி ஆசை என்று எதுவுமின்றி, பிரதமர் பதவியைத் துறந்தவர், அவர்களைப் பொறுத்தவரை இந்திய மக்கள் நலன், இந்தியாவின் நலன், மதசார்பற்ற, பிற்படுத்தப்பட்ட, பெண்களுடைய, தாழ்த்தப்பட்ட, குரலாகவும் சோனியா காந்தி இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக இருக்கிறார் என்பதையும் மறந்துவிட முடியாது. அதனால் அவர்களின் தலைமையில் எதிர்க்கட்சிகள் சேர்ந்துவருவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. முழுமையாக நம்பிக்கை இருக்கிறது."

தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் தலைமை ஏற்பதை கேக் வாக் மாதிரி சொல்லிவிட முடியாது, அதில் விவாதம் நடந்து அதிலிருநது யார் வேண்டுமானாலும் வரலாம் என்று ஒரு மாற்றுக்கருத்தைச் சொல்லியிருக்கிறார். தேர்தல் வியூகர் என்ற வகையில் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதை ஓர் ஆலோசனையாக பார்த்தால் மாநில கட்சிகளிலிருந்து அதற்கு ஏதாவது ஆதரவு வருமா? அதை நோக்கி அரசியல் நகருமா?

"சில கட்சிகள் காங்கிஸோடு கூட்டணி வைக்க முடியாது, தெலங்கானாவில் உள்ள சந்திரசேகர ராவின் கட்சி காங்கிரஸோடு கூட்டணி வைக்க முடியாது. எப்படி இங்கு திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைக்க முடியாதோ, அதேபோல அங்கே காங்கிரஸும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் கூட்டணி வைக்க முடியாது. அதேபோல ஆந்திராவிலே ஜெகனுடைய கட்சி. காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்றதினால் அவர் அங்கு கூட்டணி வைக்கப் போவதில்லை. அதேபோல ஒடிசாவில் நவீன் பட்நாயக். அங்கே நவீன் பட்நாயக்கும் காங்கிஸுக்கும்தான் போட்டி. அதேபோல உ.பியில் அகிலேஷ் யாதவ் கட்சி. இந்த நான்கைந்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கமுடியாத நிலை. தேர்தலுக்குப் பிறான கூட்டணி என்ற நிலை ஒன்றுவந்தால் அப்போது அவர்கள் வேறு சிந்தனையில் இருப்பார்கள். தேர்தலுக்கான கூட்டணி என்றால் எப்படி இங்கே திமுக, கம்யூனிஸ்டுகளோடு நாங்கள் இருக்கிறோமோ, தேசியவாத காங்கிரஸ் எப்படி காங்கிரஸ் இல்லாமல் முடியாதோ, எப்படி ஐயுஎம்எல் கேரளாவில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் நிற்க முடியாதோ, இப்படி சில கட்சிகள் காங்கிரஸின் நீண்ட கால நண்பர்கள். இந்தக் கட்சிகள் அனைத்தம் தேர்தல் கட்சியில் இணைத்துப் போட்டியிடுவோம். ஆனால், தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்றும்வரும்போது அது இடத்தின் அடிப்படையில் வரும்.

இதில் பிரசாந்த் கிஷோர் போன்றவர்களின் கருத்து என்பது நடந்து முடிந்த தேர்தலை வைத்து கணக்குப் போடுவது. அதுமட்டுமே அரசியல் என்று நினைப்பவர்கள் அவர்கள். ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டிலே ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு விதமாக இருக்கப்போகிறது. விதம்விதமாக இருக்கப் போகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இருந்தபோது, அவர் 2 முறை ஆட்சி அமைத்தார். அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம், இதே கூட்டணி இப்போது வந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு தேர்தலும் ஒருவிதமாகவும் ஒவ்வோரு வேறுவிதமாகவும் இருக்கும்."

வடக்கு, மேற்கு என்று எடுத்துக்கொண்டால், காங்கிரஸ் பாஜக போட்டி என்ற நிலை உள்ளது. கிழக்கு தெற்கு என்று பார்க்கும்போது, மாநிலக் கட்சிகளோடு பாஜக மோத வேண்டியுள்ளது. எங்கே காங்கிரஸோ பாஜக மோதுகிறதோ அங்கு பாஜகவின் வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. எங்கே பாஜக மாநிலக் கட்சிகளோடு மோதுகிறதோ அங்கு பாஜக வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ளது. களத்தில் என்று பார்ததால் 20, 30 ஆண்டுகளாகவே காங்கிரஸின் நிர்வாக அமைப்பு பலவீனமடைந்து, அந்தக் காரணத்தால் காங்கிரஸ் சமரசம் செய்துகொள்ள இடத்தில்தான் இருக்கிறது அவர் சொல்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்...

"மே, ஜூன், ஜூலை வரை காத்திருந்தார் அவர் காங்கிரஸில் சேருவதற்கு... மூத்த தலைவர்கள் அவர் சேருவதில் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக, அவர் சேருவதற்கு பிரச்சினைகள் இருப்பதால், அவருடைய பேச்சுகள் மாறத் தொடங்கிவிட்டன.

வரலாற்றிலே தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 540 சீட்கள். 200 சீட்களில் காங்கிரஸ் பாஜக நேரடி போட்டி. காங்கிரஸ் மட்டும், பாஜக மட்டும்தான். 120 சீட்களில் பாஜகவுடன் நேரடியாக மாநிலக்கட்சிகள் மோதல் மட்டும்தான். 90 சீட்களில் காங்கிரஸுக்கு நேரடிப் போட்டியாக மாநிலக் கட்சிகள். 120 சீட்களில் காங்கிரஸ், பாஜக தோழமைக் கட்சிகளின் வெற்றி. மற்ற சீட்களில் இரண்டுக் கட்சிக்கும் வேலையில்லை. அது ஆந்திரப் பிரதேசம். அங்குள்ள இரண்டு மாநிலக் கட்சிகள் மட்டும்தான் போட்டியிடுகின்றன. இதில் திரிணமூல் காங்கிரஸ் என்று பார்த்தால் 42 சீட்களில் மட்டும் போட்டியிடும் ஒரு கட்சி. அதிலேயே இதுவரை அவர்கள் 32 சீட்களில்தான் அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் தேர்தல் பொறுத்தவரை கடந்த தேர்தலில் 206 சீட்கள் வரை ஜெயித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு தேர்தல்களிலும் 40,45 சீட்களில் தோல்வி ஏற்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் வேறுவேறு முடிவுகள்தான். காங்கிரஸைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பலனிருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழகத்தில் எப்படி கடந்த 40 ஆண்டுகால அரசியலில் அதிமுக தலைமையில் திமுகவை எதிர்ப்பதும், திமுக தலைமையில் அதிமுகவை எதிர்ப்பது ஒரு பிம்பமாகிவிட்டதோ அதேபோல இந்திய அளவில் பாஜக காங்கிரஸ் என்பது உள்ளது. மூன்றாவது அணியாக வருபவர்கள், கேப்டன் விஜயகாந்த் கட்சியை தலைமையாக் கொண்டதால் என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கம் தெரியும். இதுதான் அகில இந்திய அளவில் நடக்கப் போகிறது. இவற்றைப் புரிந்துகொள்ளாமல் பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் பேசிப்பேசியே காலத்தைப் போக்கவேண்டியதுதான். அரசியலிலே முதல்முறையாக ஆலோசகராக இருக்கலாம். உ.பியில் காங்கிரஸுக்கு வரலாறு காணாத தோல்வியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். உத்தராகண்ட்டிலும் முதல்வரை இரு தொகுதிகளிலே நிற்கவைக்க பாடாய்படுத்தி உத்தராகண்ட்டில் காங்கிரஸை காலி செய்ததற்கு பிரசாந்த் கிஷோர் பொறுப்பேற்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை அவர் நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறது என்பதான பிம்பங்களை டெல்லி பத்திரிகையாளர்களை கையில் வைத்துக்கொண்டு உருவாக்கியதால் அவர் ஆடுகின்ற ஆட்டம்தான் இந்த நாட்டின் சீர்கேட்டிற்கு முக்கியப் புள்ளியாக வந்திருக்கிறது."

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x