Published : 13 Mar 2016 01:37 PM
Last Updated : 13 Mar 2016 01:37 PM

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை காப்பாற்ற நடவடிக்கை தேவை: கருணாநிதி

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை காப்பாற்ற மத்திய தேர்தல் ஆணையமும், தமிழகத் தேர்தல் ஆணையமும் தலையிட்டு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகச் சட்டப் பேரவைக்கான அட்டவணை 4-3-2016 அன்று அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஆனால் பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் குறுகிய அரசியல் லாபத்திற்காக அவற்றை மீறுவதற்கான நடவடிக்கைகள் பெருவாரியாக நடந்து கொண்டுதான் உள்ளன.

உதாரணத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்கள், விளம்பரத் தட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படவில்லை. நலத் திட்ட உதவிகளும் அவசரம் அவசரமாக பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறதாம். இப்படியெல்லாம் செய்து வாக்காளர்களாகக் கவர்ந்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கப்படவில்லை. அரசு சிற்றுந்துகளில் இரட்டை இலைச் சின்னங்கள் மறைக்கப்படவில்லை.

பேருந்து நிறுத்தங்களில் சென்னை மாநகராட்சியின் விளம்பரங்கள் மற்றும் முதல்வரின் படம் மற்றும் அரசின் சாதனைகள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் பாரதி நகர் பகுதியில், பணிகள் முழுவதுமாக முடிவடையாத பூங்காவினை அவசர அவசரமாக "அம்மா பூங்கா" என்று பெயரிட்டு முன் தேதியிட்டு, திறந்து வைத்திருக்கிறார்கள்.

தேர்தல் நேர்மையாக நடக்கவேண்டுமென்பதற்காக, சென்னை மாநகராட்சியில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் ஊழியர்கள், அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கி தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் மாதமே கடிதம் அனுப்பியது.

அதற்கேற்ப, மாநகராட்சி உயர் அதிகாரிகள் அவர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்ட போதிலும் துறைத் தலைவர்கள் தங்களுக்கு வேண்டியோரை பணியிட மாறுதல் செய்யாமல் இருக்கிறார்கள்.

ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்களை உடனே இட மாறுதல் செய்து தேர்தல் நடத்தை விதிகளின்படி நடந்திடத் தேர்தல் கமிஷன் மாநகராட்சியை வலியுறுத்த வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்களை கட்சிக் காரியங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கான தீவிர ஆய்வுகளை தேர்தல் ஆணையம் நடத்தி, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை மாவட்டக் கலெக்டர் எம். கருணாகரனே தமிழக ஊரக பஞ்சாயத் ராஜ் இயக்குநருக்கு அனுப்பியுள்ள செய்தியில், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குனர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேண்டுமென்றே மீறி, முன்தேதியிட்டு கோப்பில் கையெழுத்திட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த அதிகாரி விஜயகுமார் என்பவர், அந்த மாவட்டத்திலேயே பல்வேறு பணிகளில் பணியாற்றி நான்கரை ஆண்டுகளை அங்கேயே நிறைவு செய்துள்ளார். இந்த மாவட்டத்தில் மேம்பாட்டுத் துறையில் 3 ஆண்டுகளில் பணியாற்றி நிறைவு செய்த அதிகாரிகளை இதுவரை பணி மாறுதல் செய்யவில்லை.

அதற்கான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. விற்கு ஆதரவாக 275 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை தேர்தல் விதிமுறைகளை மீறி கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த அதிகாரி திடீரென பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இந்த ஒரு மாவட்டத்தில் மாத்திரமல்ல; தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் பணியாற்றும் மாவட்ட திட்ட அதிகாரிகள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். ஏன் ஒரு சில மாவட்ட ஆட்சியர்களே கூட தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களாகவே பணியாற்றி வருகிறார்கள். உள்ளாட்சித் தொடர்பான பல்வேறு திட்டங்களை மாவட்டத் திட்ட அதிகாரிகள் தான் செயல்படுத்த வேண்டும்.

அந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கடலுhர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைமைப் பொறியாளர்கள் உள்ளாட்சித் துறையில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

திண்டிவனம் காவல் துறை டி.எஸ்.பி. மூன்றாண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பது தான் மாற்றாமல் இருப்பதற்குக் காரணம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு இலவச மிதிவண்டிகள் கொண்டு வந்து மாணவர்களுக்குக் கொடுக்க முற்பட்டபோது, திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையின் பறக்கும் படையினர் அங்கே வந்து இலவச சைக்கிள்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா தி.மு. கழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தத் தொகுதியில் இந்த ஆட்சியாளர்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல் புறக்கணித்து வந்தார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மன்னார்குடி நகராட்சிப் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடந்த நிலை யில் 9.3.2016 அன்று அவசர அவசரமாக மன்னார்குடி 18வது வார்டில் சாலைச் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதைக் கண்ட கழகத்தினர் நேரில் சென்று கேட்ட போது நகராட்சி ஆணையர் பொறுப்பிலே இருப்பவர் உத்தரவின் பேரில் தான் பணி நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கழக முன்னணியினர் பழ.மணி, வீரா.கணேசன், தனராஜ், கண். மணிவண்ணன், மோகன்குமார், கார்த்திகேயன், துன் முகம்மது, பிரபு போன்றவர்கள் அந்தப் பணியைத் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், நகராட்சி ஆணையர் பணிகளைத் தொடருவதிலேயே குறியாக இருந்தார்.

இந்தத் தகவலை அறிந்த மன்னார்குடி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து சட்ட விதிகளின்படி பணியை உடனடியாக நிறுத்தக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அரசின் மீதுள்ள அக்கறையினால்தான் ஆணையர் இதைச் செய்தாரா என்றால் அதுவும் இல்லை. அந்தக் குறிப்பிட்ட பணியை நகர் மன்றத் தலைவியின் கணவர் நிறைவேற்ற ஒப்பந்தம் செய்து கொண்ட காரணத்தால், அவர்களுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற தனிப்பட்ட அக்கறையோடு நடந்து கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. உறுப்பினரான, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.., நடராஜ், அலெக்சாண்டர் உட்பட பல போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிராக ஏராளமான போலீசார் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தலைவர்களின் அறைகள், மன்ற கூட்டம் நடக்கும் அறைகளைப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பொறியாளரின் அறையில் அமர்ந்து கொண்டு, ஆவணங்களை தலைவர் பார்வையிட்டு எடுத்துச் சென்றதாகப் புகார் கூறப்படுகிறது.

தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள், அரசு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் காண்பிக்கப்படுகிறது.

அதிமுக தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளால் நடத்தப்படும், தொலைக்காட்சிகளுக்கு அரசு கேபிள் நிறுவனத்தின் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. அவற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

வனத் துறை அமைச்ரின் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அ.தி.மு.க. அரசினால் காப்பாற்றப்படாமல், அவற்றைப் புறக்கணிப்பதும், அவற்றிற்கு எதிராக நடப்பதும் தொடர்ந்து கொண்டே இருப்பதை மேலும் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே மத்திய தேர்தல் ஆணையமும், தமிழகத் தேர்தல் ஆணையமும் உடனடியாக முக்கியமான இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு நியாயத்தை நிலைநாட்டிட வேண்டுமென்றும்; ஆளுங்கட்சிக்கு ஓர் அணுகுமுறை, எதிர்க் கட்சிகளுக்கு வேறொரு அணுகுமுறை என்றில்லாமல், சட்டமும், நடத்தை விதிகளும் அனைவர்க்கும் சமம் என்ற முறையில், துளியும் பாரபட்சமின்றி அமலாக்கம் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x