Last Updated : 01 Jan, 2022 11:11 AM

 

Published : 01 Jan 2022 11:11 AM
Last Updated : 01 Jan 2022 11:11 AM

திருநள்ளாறில் உருவாகி வரும் ஆன்மிகப் பூங்கா

திருநள்ளாறில் அமைக்கப்பட்டு ஆன்மிகப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குளம்.படங்கள்: வீ.தமிழன்பன்

காரைக்கால்

புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்கால் பிராந்தியத்தின் அடையாளமாக இருக்கும் வகையில் திருநள்ளாறில் சிறப்பு அம்சங்களுடன் உருவாகி வரும் ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் என பிரசித்திபெற்ற பல்வேறு வழிபாட்டுத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் பிராந்தியம் ஒரு ஆன்மிக சுற்றுலா மையமாக விளங்குகிறது. நாள்தோறும் ஏராளமான ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின் றனர். குறிப்பாக, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமைகளிலும், சனிப் பெயர்ச்சி விழாவின்போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து செல்வர்.

புதுச்சேரி அரசு சார்பில் திருநள்ளாறு ‘கோயில் நகரம்' என அறிவிக்கப்பட்டு, ஹட்கோ நிதியுதவியுடன் கோயில் நகரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு நளன் குளம் புனரமைப்பு, வரிசை வளாகம், தங்கும் விடுதிகள் போன்ற பல்வேறு பணிகள் ஏற்கெ னவே முடிக்கப்பட்டு பயன்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோயில் நகரத் திட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில், காரைக்காலிலிருந்து திருநள்ளாறுக்குள் நுழையும் பகுதியில், புறவட்ட சாலைக்கு அருகே மத்திய அரசின் நிதியுதவி யுடன் ரூ.7 கோடி செலவில் ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணிகள் புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்காலுக்கு வரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஒருநாள் முழுவதும் இங்கேயே இருக்கச் செய்யும் வகையில், நவக்கிரக கோயில்களை பிரதிபலிக்கும் வகையில் கோபுரங்களுடன் கூடிய நவக்கிரக தல அமைப்பு, சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய பெரிய அளவிலான தியான மண்டபம், மூலிகைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆன்மிகப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஆன்மிக பூங்கா அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் பணிகள் தொய்வடைந்திருந்தன. ஆனால், தற்போது ஆன்மிகப் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கே.வீர செல்வம், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

ஆன்மிகப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த ஒரு குளம் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. நவக்கிரக தல அமைப்பு, தியான மண்டபம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. மூலிகைப் பூங்கா, நடைபாதை அமைக்கும் பணிகள் நிறைவடை யும் தருவாயில் உள்ளன. வண்ணம் பூசுதல், மின்சாரப் பணிகள், தியான மண்டபத்தில் ஒலி அமைப்புகள் ஏற்படுத்த வேண்டியது உள்ளிட்ட சில பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இது காரைக்காலின் அடையாளமாக (லேண்ட் மார்க்) விளங்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.

திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆர்.சிவா 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ரூ.7 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் ஆன்மிகப் பூங்கா பணிகள் பிப்ரவரி மாதத் துக்குள் நிறைவடைந்து பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு விடும்.

இப்பூங்காவில் தற்போது செய்யப்பட்டுள்ள பணிகள் அல்லாமல் பெரிய அளவிலான சிவன் சிலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x