Published : 31 Dec 2021 02:37 PM
Last Updated : 31 Dec 2021 02:37 PM

தீவுத் திடலில் பொருட்காட்சி நடத்த அனுமதி: ஜனவரி மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

சென்னை

சென்னை தீவுத் திடலில் பொருட்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கப்படும்.

சுமார் 2 மாதம் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவு இடம்பெறும். இதனால், குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், பணிச்சுமைக்கிடையே பொழுதுபோக்குவதற்காகவும் பெற்றோர் அதிக அளவில் பொருட்காட்சிக்கு வருவார்கள்.

உணவகங்கள், சிறுவர் ரயில், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுவதால், சென்னை மட்டுமின்றி, புறநகர்ப் பகுதி மக்களும் அதிக அளவில் பொருட்காட்சியைக் காண வருவார்கள்.

மத்திய, மாநில அரசுத் துறைகளின் சாதனைகள் குறித்த அரங்குகளும் இதில் முக்கிய இடம்பெறும். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொருட்காட்சியை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

ஆனால், கரோனா பாதிப்பு காரணமாகத் தீவுத்திடலில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது பொருட்காட்சியை நடத்தச் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``தமிழக சுற்றுலாத் துறை சார்பாக இதுவரை 46 பொருட்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும், நடப்பாண்டில் பொருட்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் சுற்றுலாத் துறை மேற்கொண்டது. இதற்கு அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.

அதேசமயம், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொடர்ந்து பொருட்காட்சி தொடங்குவதற்கு டெண்டர் விடப்படும். ஜனவரி இறுதியில் பொருட்காட்சி தொடங்க வாய்ப்புள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x