Published : 31 Dec 2021 08:00 AM
Last Updated : 31 Dec 2021 08:00 AM

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என தந்தை உறுதி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என மாணவியின் தந்தை கூறினார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (20). சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, ஐஐடி-ல் படித்து வந்தார்.

இந்நிலையில், 2019-ல் அவரது அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் பாத்திமா இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கோட்டூர்புரம் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சிபிஐ விசாரணை நடைபெற்றது. மாணவி, யாருடன் கடைசியாகப் பேசினார், என்னென்ன தகவல்களைப் பரிமாறினார், தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாணவி பாத்திமா பயன்படுத்திய லேப்டாப், டேப் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ முடித்து வைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், வழக்குக்காக சென்னை வந்திருந்த மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், வழக்கறிஞர் முகமது ஷா ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாத்திமாவுக்கு வீட்டின் ஞாபகம் அதிகமாக இருந்த காரணத்தால்தான் தற்கொலை செய்துகொண்டதாக, நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பாத்திமா தற்கொலைக்கு பேராசிரியர்கள் சிலர் காரணம் என்று கூறப்படும் நிலையில், வீட்டைவிட்டுப் பிரிந்ததுதான் காரணம் எனக் கூறுவது, குற்றவாளிகளை மறைப்பதற்கு துணைபோவதாக உள்ளது. எனவே, நாங்கள் தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடுவோம். சிபிஐ அறிக்கையைப் பெற்ற பின்னர், மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x