Published : 30 Dec 2021 06:13 AM
Last Updated : 30 Dec 2021 06:13 AM

மாணவர்களுக்கு பள்ளியிலேயே தடுப்பூசி போட நடவடிக்கை: தடுப்பூசி பணியை ஜன.3-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

மாணவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இப் பணியை ஜன.3-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கிவைக்கிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் பகுதியில் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கோண்டார். அவருடன் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர்ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஏ கருணாநிதி உள்ளிட்டோர் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலமாவட்டங்களில் கரோனா பாதிப்புஅதிகரித்து வருகிறது.சென்னையில் கடந்த 10 நாட்களில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் 180-க்கும் மேற்பட்டோர் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில்,507 தெருக்களில் மட்டுமே கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இதில் 429 தெருக்களில் 3-க்கும் குறைவான பாதிப்புதான் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 முதல் 10 பேர் உள்ள 4 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகஅறிவிக்கப்பட்டு, தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை ‘எஸ்’ வகை மரபணு மாற்றம்அடைந்த கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 129 பேர். அனைவரது மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கு ‘எஸ்’வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத சூழல் நீடிக்கிறது. ஒமைக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் தயார் நிலையில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டமாணவர்களை கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை ஜன.3-ம் தேதி போரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x