Published : 30 Dec 2021 07:23 AM
Last Updated : 30 Dec 2021 07:23 AM

ஜனவரி 2-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா; நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சம் வடையில் மாலை: 2 ஆயிரம் கிலோ உளுந்து மாவில் தயாரிப்பு பணி தொடக்கம்

ஜனவரி 2-ல் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகளில் மாலை அணிவிக்கப்படவுள்ளது. இதற்காக கோயில் மண்டபத்தில் வடைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை கட்ட தயாரிக்கப்பட்டுள்ள வடைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஜன.2-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட உள்ளது. இதற்காக கோயில் மண்டபத்தில் 2,050 கிலோ உளுந்து மாவில் வடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜன.2-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதைஅடுத்து, 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கோயில் மண்டபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கோயில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது: திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் அய்யர் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் வடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வடை பிரசாதம்

இவர்கள் தொடர்ந்து 7-வது ஆண்டாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வடை தயாரிக்க 2,050 கிலோ உளுந்து மாவு, தலா 32 கிலோ மிளகு, சீரகம் மற்றும் 120 கிலோ உப்பு, 900 லிட்டர் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வடைகள் தயாரிக்கப்படுகின்றன. வடை தயாரிக்கும் பணி 3 நாட்கள் நடைபெறும்.

ஜன.1-ம் தேதி வடையை மாலையாக கோர்க்கும் பணி நடைபெறும். அன்று நள்ளிரவு முதல் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடை மாலை சாத்தப்படும். வரும் 2-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையுடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்த வடை பிரசாதமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x