Published : 30 Dec 2021 08:12 AM
Last Updated : 30 Dec 2021 08:12 AM

மனைகள், வீடுகளுக்கு துல்லிய நில வரைபடம் தயாரிக்க ஆளில்லா விமானம் மூலம் புதுச்சேரியில் டிஜிட்டல் சர்வே

மத்திய அரசின் ‘சமித்துவா’ திட்டத்தின் கீழ், ஆளில்லா விமானம் மூலம் டிஜிட்டல் சர்வே முறையில் மனைகள், வீடுகளுக்கு துல்லிய நில வரைப்படம் தயாரிக்கும் பணி புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்து அடையாள அட்டை தரும் ஆயத்த பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘சமித்துவா’ என்கிற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற பகுதிகள் வான்வழியே சர்வே செய்யப்பட்டு மனைகள், வீடுகளுக்கு துல்லியமான வரைப்படம் பெறப்பட உள்ளது. இதுமட்டுமின்றி சொத்து அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.புதுச்சேரி, காரைக்கால் கிராமப்புற பகுதிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக புதுச்சேரி அரசு வருவாய் பேரிடர் துறை, நில அளவை இயக்குனரகம், மத்திய அரசின் சர்வே ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக புதுச்சேரி, மணலிப்பட்டில் ‘ட்ரோன்’ மூலம் சர்வே செய்யும் பணி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து மனைகள், வீடுகளின் எல்லைகள் சுண்ணாம்பு மூலம் அடையாளம் வரையப்பட்டது. இந்த சர்வே பணிக்காக நேற்று இரண்டு மணி நேரம் ஆளில்லா விமானம் வானில் பறக்கவிடப்பட்டு, சர்வே செய்யப்பட்டது. இந்த சர்வே செய்யும் பணியை நில அளவை துறை இயக்குநர் ரமேஷ், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா, வில்லியனூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சர்வே துறை இயக்குநர் ரமேஷ், "தொழில்நுட்ப ரீதியாக சர்வே செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், 120 மீட்டருக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து சென்று படம் பிடித்து தரும். ஒரு நொடிக்கு 50 அடிக்கு மேல் கணக்கிட முடியும். இதன் மூலம் துல்லியமான அளவீடு கிடைக்கும். துல்லிய வரைப்படம் இதன் மூலம் தயாரிக்க முடியும். புதுச்சேரியில் முதன் முறையாக செட்டிப்பட்டு கிராமத்தில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அளவீடு முடிந்த பிறகு சொத்து அடையாள அட்டை தரப்படும்.

அதில் வீட்டு உரிமையாளரின் புகைப்படம், வீட்டின் எல்லைகள், ஏரியா, நீளம்-அகலம் விவரம், வீட்டின் படம், ரீ சர்வே எண், பட்டா அல்லது மனையின் எப்எம்பி வரைபடம் உள்பட அனைத்தும் இருக்கும்.

சொத்து பத்திரம் எடுத்து செல்லாமல், இந்த சொத்து அடையாள அட்டையை காண்பித்து வங்கிக் கடன், இதர வசதிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் துல்லிய வரைப்படம் அரசுக்கு கிடைக்கும். இது மத்திய அரசு உத்தரவுப்படி செயல்படுத்தப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிக நன்மை தர கூடியது.

இத்திட்டத்தால் கிராம வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். கொம்யூன் பஞ்சாயத்துகள் சொத்து வரியை வசூலித்து பெருக்கவும் இதில் வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களையும் இப்படி சர்வே செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x