Published : 30 Dec 2021 08:54 AM
Last Updated : 30 Dec 2021 08:54 AM

மக்கள் நீதிமன்ற நடவடிக்கையால் 8 ஆண்டுகளுக்கு பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பல்கலை

புதுச்சேரி காரைக்கால் அருகேயுள்ள நிரவி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.எம்.பாலாஜி. கடந்த 15.11.2021-ம் தேதி திருநெல்வேலியிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் எம்.எஸ்.சி. கணிதவியலில் 2-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அதற்கான மதிப்பெண் சான்றிதழையும் பெற்றுள்ளேன். இந்நிலையில், 3 பாடங்களுக்கு முன்னேற்ற தேர்வு எழுதியதில் 60.03 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். ஆனால், எம்எஸ்சி பட்ட சான்றிதழ் வழங்கப்படவில்லை. முன்னேற்ற தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழும் அளிக்கப்படவில்லை. பட்ட சான்றிதழையும், மதிப்பெண் சான்றிதழையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நிரந்தர மக்கள் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பல்கலைக்கழக தரப்பிலிருந்து நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த மனு விசாரணையின்போது, பட்டமளிப்பு கட்டணம் ரூ.2 ஆயிரம், தேடுதல் கட்டணம் ரூ.1,600 செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உரிய கட்டணத்தை பாலாஜி பல்கலைக்கழகத்தில் செலுத்தினார். அதற்கான சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பாலாஜியின் பட்டம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. அச் சான்றிதழ்களை பாலாஜியிடம் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ். சமீனா வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x