Published : 29 Dec 2021 07:07 AM
Last Updated : 29 Dec 2021 07:07 AM

சமத்துவ கல்லறைகள் அமைக்க வேண்டும்: சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தலைமை வகித்தார். ஆணைய உறுப்பினர்-செயலர் துரை ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில், கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: சமூகத்தில் அனைவருக்கும் கிடைக்கும் உரிமைகளை, சிறுபான்மையினருக்கும் பெற்றுத்தர சிறுபான்மையினர் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சிறுபான்மையின வகுப்பினருக்கு அதிக பிரதிநிதித்துவத்தை முதல்வர் வழங்கியுள்ளார்.

ஜெயின் சமூகத்தினர் சிறுபான்மையின சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருந்தது. இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினேன். 10 நாட்களில் அரசாணை வெளியிட்டு, சான்றிதழ் கிடைக்கச் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

மாநில சிறுபான்மையின ஆணையத்துக்கு தினமும் 100 மனுக்கள் வருகின்றன. அவற்றில் 90 மனுக்கள் அடக்கஸ்தல பிரச்சினை தொடர்பானவை. அடக்கஸ்தலத்துக்கு நிலம் கொடுத்த பின்னரும், அனுமதி வாங்க 5 ஆண்டுகளாகிறது.

கல்லறை என்பது தனித்தனியாக இருக்க முடியாது. அனைத்து சமூகத்தினரும் ஒன்று என்ற நோக்கில், சமத்துவ கல்லறைகள் அவசியம். எனவே, ஒவ்வொரு ஊரிலும் சமத்துவபுரம் இருப்பதுபோல, ஒவ்வொரு ஊரிலும் சமத்துவ கல்லறைகள் அமைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், ஆசிரியர் காலி பணியிடங்களை நிர்ணயம் செய்வதில் பிரச்சினை நிலவுகிறது. இதற்கும் உரிய தீர்வுகாணப்படும்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.ஆணையத்துக்கு வரும் மனுக்களின் நிலவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளக்கூடிய வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

இக்கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் ஆர்.டி.சேகர், பிரபாகர் ராஜா, ஜெ.ஜெ.எபினேசர், பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x