Published : 29 Dec 2021 07:00 AM
Last Updated : 29 Dec 2021 07:00 AM

14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு

சென்னை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 14 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 சதவீத அகவிலைப்படி உயர்வு, தமிழகஅரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துஉள்ளன.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதம் சேர்த்து, 31 சதவீதமாக உயர்த்தி ஜனவரி 1 முதல் ரொக்கமாக வழங்கியதற்கு, தலைமைச் செயலக சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு: அகவிலைப்படி உயர்வு மூலம் சொன்னதைச் செய்யும் முதல்வர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துஉள்ளார். அவருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன்: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை அறிவிக்க கோரியதை ஏற்று,அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களின் இதரகோரிக்கைகளையும் முதல்வர்விரைவில் பரிசீலித்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சா.அருணன்: நிதிநிலை சரிஇல்லை என்றாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியும் பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு ஊழியர்க்கு ரூ.3 ஆயிரம் வழங்கியுள்ள முதல்வருக்கு கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேரவை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுந்தரம்: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டதை பேரவை வரவேற்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு: அகவிலைப்படியை உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் இந்த அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்கப்பட்டால் நிலுவைத்தொகை கிடைக்கும். மேலும், ஈட்டிய விடுப்பு சரண் செய்வது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன்: மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை, மாநில அரசு ஊழியர்களுககும், உயர்த்தி வழங்கியிருப்பதுபோல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் நிச்சயம் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன்: ஆசிரியர், அரசு ஊழியர்களின் பாதுகாவலராக திகழும் முதல்வர், பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, 14 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது, 18 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்றரை கோடி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x