Published : 27 Dec 2021 03:17 PM
Last Updated : 27 Dec 2021 03:17 PM

காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன ஆண்டு விழா: சத்தியமூர்த்தி பவனில் நாளை கொண்டாட்டம்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன ஆண்டு விழாவையொட்டி நாளை சத்தியமூர்த்தி பவனில் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் கூட்டணி கட்சிகளுடன் இணைத்து 70 ஆண்டு கால ஆட்சியைத் தந்தது காங்கிரஸ் கட்சி. எந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தை, அடக்குமுறையை எதிர்க்க இந்தியாவில் ஒரு வீறுகொண்ட இயக்கம் தேவைப்பட்டதோ அதே ஆங்கிலேய குடிமகன் ஒருவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) காங்கிரஸ் இயக்கம் உருவாக காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தார். கோகலே, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்துள்ளனர். பின்னர் ஜவகர்லால் நேருவைத் தொடர்ந்து காமராஜர், இந்திரா காந்தி, நரசிம்மராவ், சோனியா காந்தி என்று இன்றுவரை காங்கிரஸ் கட்சியின்பாதை நீண்டு நெடியதாக உள்ளது.

இந்திய தேசியக் காங்கிரசின் மூவர்ணக்கொடியில் ஆரம்பத்தில் ராட்டை சின்னம் இருந்தது. பின்னர் சுதந்திர இந்திய அரசின் கொடியாக மூவர்ணக் கொடியில் அசோகர் சக்கரம் இடம்பெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் கொடியாக மூவர்ணக் கொடியில் கை சின்னம் இடம்பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன ஆண்டு விழாவை தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில மாநிலக்குழுவின் ஊடகத்துறை தலைவர் ஆர்.கோபண்ணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாளை செவ்வாய்க்கிழமை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 150 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி நினைவு கம்பத்தில் காங்கிரஸ் கொடிய ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழக காங்கிரஸ் சேவாதளத் தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ் விஜயன் தலைமையில் நடைபெறும் சேவாதள அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்வார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்கள் மற்றும் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், துணை அமைப்புகள், பிரிவுகள், மற்றும் துறைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள்'' என்று ஆர்.கோபண்ணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x