Published : 05 Mar 2016 02:32 PM
Last Updated : 05 Mar 2016 02:32 PM

வறுமையால் பிச்சை எடுக்கும் அவலம்: கவுரவமாக வாழ அரசு வேலை தேவை - பட்டதாரி திருநங்கை வலியுறுத்தல்

வறுமையால் பிச்சை எடுக்கும் அவலத்தை போக்கவும், கவுரவமாக வாழவும் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வேலை வழங்க வேண்டும் என்று எம்.காம்., எம்.பில். படித்துள்ள திருநங்கை கார்த்திகா வலியுறுத்தி உள்ளார்.

காரைக்குடியில் தேவகோட்டை ரஸ்தா ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் மா.கார்த்திகா(32). திருநங்கையான இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். அங்குள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கார்த்திகா எம்.காம்., எம்.பில். படித்துள்ளார். கூடுதலாகக் கணினி பயிற்சியும் முடித்துள்ளார்.

இது குறித்து அவர் `தி இந்து’விடம் கூறியதாவது:

எனது பாட்டி கருப்பாயி அரவணைப்பில் படித்தேன். என் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் 2010-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். 2014-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

காரைக்குடி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகேட்டு விண்ணப்பித்துள்ளேன். யாரும் வேலை தராமல் ஏளனமாகப் பார்க்கின்றனர். அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளையும் எழுதி வருகிறேன்.

எனது பாட்டி கருப்பாயியுடன் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். சில நாட்களுக்கு முன்புதான் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்கினர். வீட்டு வாடகை, அன்றாடச் செலவுக்குப் பணம் தேவைப்படுவதால், கடைகளில், பேருந்துகளில் பிச்சை கேட்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே கவுரவமாக வாழ்வ தற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலை வழங்கினால் எங்களது வாழ்க்கை மேம்படும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x