Published : 24 Dec 2021 10:21 PM
Last Updated : 24 Dec 2021 10:21 PM

தமிழ்நாட்டில் அம்பேத்கர் புகழ் பரவக் காரணமே திராவிட இயக்கம்தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டில் அம்பேத்கர் புகழ் பரவக் காரணமே திராவிட இயக்கம்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அம்பேத்கர் விருது பெற்றுக் கொண்ட முதல்வர், "வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு, வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8.25 லட்சம் ரூபாய் வரை, தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை குறைந்தபட்சம், 1 லட்சம் ரூபாய்; அதிகபட்சமாக, 12 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதி வழியே உயர்த்தி வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.

முதல்வர் உரை முழுமையாக: எனக்கு இந்த விருது தரப்போகிறோம் என்று நம்முடைய திருமா சொன்னபோது, எனக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், பூரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு அச்சமும் ஏற்பட்டது.

இந்த விருதைப் பெறுவதற்கு எனக்குத் சற்றே தயக்கமாகக்கூட இருந்தது. அண்ணல் அம்பேத்கர் பெயரிலான விருதைப் பெறும் அளவுக்கு நான் மிகப்பெரிய சாதனை ஒன்றும் செய்திடவில்லை. என் கடமையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

● மாநில ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையம் அமைத்ததாக இருந்தாலும்

● அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு நினைவகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பாக இருந்தாலும் -

● பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் -

● மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவை அமைத்ததாக இருந்தாலும்

இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது! அதை முதலில் நான் இங்கே தெளிவுபடுத்தியாக வேண்டும்.

அம்பேத்கர் சுடர் விருதைப் பெறுவதன் மூலமாக நான் அந்தப் பெருமையில் கர்வம் கொள்ளவில்லை. திருமாவளவன் என் மீது வைத்துள்ள மரியாதையின் மாபெரும் அளவு இதன் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது, அதுதான் உண்மை. இன்னமும் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு, இந்த மனித சமுதாயத்திற்கு எத்தனையோ சாதனைகளைச் செய்தாக வேண்டும் - திட்டங்களை உருவாக்கித் தந்தாக வேண்டும் என்று என்னை நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள், உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள், அதைத்தான் நான் உணர்கிறேன். இந்த மேடையில், இந்த விழாவில் இந்த விருதை நம்முடைய திருமா வழங்க அதைப் பெற்றபோது, அந்த விருதை, அந்தப் பெருமை அத்தனையையும் கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கு அர்ப்பணிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

''நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிற காரணத்தால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என்னுயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்'' என்று முதன் முதலில் முதலமைச்சரானபோது தமிழினத் தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். சட்டமன்றத்திலேயே அதை பதிவு செய்திருக்கிறார். ''எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ் பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறக்கூடிய பெருமை எனக்கில்லை, கல்லூரிப் பட்டமும் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிப் பள்ளியும்தான். நான் பட்டம் பெறாதவன் என்றாலும் பகுத்தறிவுப் பண்பாளன். சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவினுடைய நீதியே என் சாதியென மதிப்பவன் நான்" என்று பேசினார். அப்படித்தான் செயல்பட்டார். அடித்தட்டு மக்களுக்காகத்தான் இயக்கம் நடத்தினார். அதனால்தான் நீங்கள் அவருக்கு ‘சமத்துவப் பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினீர்கள். அவருடைய வழித்தடத்தில் வந்தவன் நான். கலைஞரின் மகன் என்பதை பெருமையாக நினைப்பவன் நான்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டபோது மகாராஷ்டிர மாநில அரசு அதனைக் கிடப்பில் போட்டது. சிலர் எதிர்த்தார்கள். வன்முறைகளில் ஈடுபட்டார்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலேயே இந்த நிலைமை இருந்தது. மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து தந்தி அனுப்ப வேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டார். உடனடியாகப் பல்லாயிரக்கணக்கான தந்திகள் போனது. அப்பொழுது அந்த மாநிலத்தினுடைய ஆளுநர் அலெக்சாண்டர். அப்போது அந்த மாநிலத்தினுடைய முதலமைச்சர் சரத்பவார் கலைஞருக்குப் பதில் அனுப்பினார்கள். ‘பெயரைச் சூட்டுவோம்’ என்று அறிவித்தார். 1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக் கல்லூரிக்கு ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’ என்று பெயர் சூட்டியவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

1997-ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் தலைவர் கலைஞர்தான். மராட்டியத்தை விடத் தமிழ்நாட்டில் அம்பேத்கர் புகழ் பரவக் காரணமே திராவிட இயக்கம்தான். அம்பேத்கரின் 'சாதியை ஒழிக்கும் வழி' என்ற நூலை 1936-ஆம் ஆண்டே தமிழில் மொழிபெயர்த்து புத்தகம் போட்ட இயக்கம், திராவிட இயக்கம். சுயமரியாதை இயக்க மாநாட்டுக்கு அம்பேத்கரை அழைத்து, அவர் வர இயலாத சூழ்நிலையில் மராட்டியத்தில் இருந்து எம். ஜெயகரை அனுப்பி வைத்தவர் அம்பேத்கர். அந்தளவுக்கு அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம்தான் என்பதை மறந்துவிட முடியாது.

1987-ஆம் ஆண்டு 'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நான் நடித்தேன். அந்தத் திரைப்படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர். மாணவர்கள் இடையிலும் சாதிப்பூசல்கள் இருக்கிறதே என்ற வேதனையில் கலைஞர் அந்தக் காவியத்தைத் தீட்டினார். கிராமத்தில் இருந்து நகரத்துக்குப் படிக்க வந்து - படிப்பை முடித்துவிட்டு - மீண்டும் கிராமத்துக்கு வந்து - சீர்திருத்தவாதியாகச் செயல்படும் நந்தகுமார் என்ற பாத்திரத்தை ஏற்று நான் நடித்தேன். பண்ணையாருடைய ஆதிக்கத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் புரட்சியாளனாக வருவேன். இறுதியாக நான் தாக்கப்படும்போது – “ஒரு போராளியின் பயணமிது .... அவன் போராடிப் பெற்ற பரிசு இது" என்ற பாடல் ஒலிக்கும். அந்தப் பாடலை எழுதியதும் தலைவர் கலைஞர்தான். இந்த விருதைப் பெறும்போது அந்த வரிகளைத்தான் நினைத்துப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியதால் பெறும் பரிசாகத்தான் நான் இந்த விருதை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இதில் இன்னொரு பெருமை என்னவென்றால், அம்பேத்கர் பெயரிலான விருதை, பெரியார் திடலில் வைத்து வாங்குவதை விட வேறு எந்தப் பெருமை எனக்குக் கிடைக்கப் போகிறது.

● “டாக்டர் அம்பேத்கருக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது"

● “எங்கள் இருவர் கருத்தும் பல விஷயங்களில் ஒன்றுபோலத்தான் இருக்கும்"

● “தமிழ்நாட்டின் சிவராஜ், வீரையன் போன்றவர்களையும், அகில இந்திய அளவில் அம்பேத்கரையும் நம்புங்கள்"

● “அம்பேத்கர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது" என்று இப்படியெல்லாம் சொன்னவர் தந்தை பெரியார்! இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

● எந்த ஒரு தலைவரையாவது தந்தை பெரியார் இவ்வளவு உயரத்துக்குப் பாராட்டியதாக வரலாறு கிடையாது. அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்தது கிடையாது! அதேபோல, அதற்கு இணையான பாசத்தையும் அன்பையும் தந்தை பெரியார் மீதும் அம்பேத்கர் வைத்திருந்தார். “நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும்" என்று சிலர் கோரிக்கை வைத்தபோது, “உங்களுக்குத்தான் பெரியார் ராமசாமி இருக்கிறாரே? அவரை வைத்து இயக்கம் நடத்துங்கள்" என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.

● 1969-ஆம் ஆண்டு முதல்முதலில் முதலமைச்சரான தலைவர் கலைஞர் தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் தனித்தனியே உருவாக்கினார்கள். அதற்கென்று அமைச்சர்களை நியமித்தார்கள். பட்டியலின மக்களுக்கு 18 விழுக்காடும் , பழங்குடியினருக்கு 1 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும் வழங்கிய தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

● ஆதிதிராவிடர் நலத்துறை

● அவர்களுக்கான இடஒதுக்கீடு

● ஆதிதிராவிடர் வீட்டுவசதிக் கழகம்

● ஆதிதிராவிட மாணவர்க்கு இலவசப் புத்தகங்கள்

● இலவசப் பகல் உணவு

● ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் குடியிருப்புகள்

● மாணவர் இல்லங்கள்

● நவீன வசதியுள்ள விடுதிகள்

● உழவு மாடுகள் வாங்கக் கடன்

● தரிசு நிலங்கள் வழங்கியது.

● வீட்டுமனைகள்

● மாநில ஆதிதிராவிடர் நலக்குழு

● மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு

● தீண்டாமைக் குற்றங்களைக் கண்காணிக்கக் குழு

● அம்பேத்கர் பெயரால் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி

● அம்பேத்கர் திரைப்படத்துக்கு நிதி உதவி

● அம்பேத்கர் பெயரால் விருது

● அம்பேத்கர் நூற்றாண்டு விழா

● அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு

● சமத்துவபுரங்கள்

● அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

இவை அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர்.

இந்தச் சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சிதான் இப்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய ஆட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை. நாம் ஆட்சிக்கு வந்து, என்னுடைய தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு, விரைவாக விழிப்புணர்வுக் கண்காணிப்புக் கூட்டம் என்ற கூட்டத்தைக் கூட்டினேன்.

அந்தக் கூட்டத்தில் பேசுகிறபோது நான் சொன்னேன்.

● கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலின மக்கள் உரிய இடங்களைப் பெற்றாக வேண்டும்.

● சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது.

● அவர்களது வளர்ச்சி சாதியைக் காரணம் காட்டி தடுக்கப்பட்டுவிடக் கூடாது.

● அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டத்திலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட்டாக வேண்டும்.

● அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும்

- என்று நான் குறிப்பிட்டேன்.

இத்தகைய சிந்தனை கொண்ட அரசாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டேன். இதை ஏதோ பொதுக்கூட்டத்தில் நான் சொல்லவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகளை வைத்துக் கொண்டு கோட்டையில் நடந்த கூட்டத்தில் தெளிவாகச் சொன்னேன். இந்த வழித்தடத்தில் இருந்துதான் நான் செயல்படக் போகிறேன் என்று உறுதியாகச் சொன்னேன்.

● வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை, விரைவாக இறுதி செய்ய, ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்சமயம், 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும், நான்கு புதிய நீதிமன்றங்களை அமைக்க நான் ஆணையிட்டிருக்கிறேன்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை, சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்க தேவையான, விழிப்புணர்வு பயிற்சிகள், 'சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில், காவல்துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.

● தமிழ்நாட்டில், பல கிராமங்களில், சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்கிற காரணத்தால், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு, வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8.25 லட்சம் ரூபாய் வரை, தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை குறைந்தபட்சம், 1 லட்சம் ரூபாய்; அதிகபட்சமாக, 12 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதி வழியே உயர்த்தி வழங்கப்படும்.

- வன்கொடுமையே நடக்கக் கூடாது என்பதுதான் கழக அரசின் கொள்கை ஆகும்.

பண்டிதர் அயோத்திதாசரும் - இரட்டமலை சீனிவாசனாரும் - எம்.சி.ராஜாவும் - என்.சிவராஜும் - தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - தலைவர் கலைஞரும் உலவிய இந்த மண்ணில் இத்தகைய சமூகப் பாகுபாடுகளும் - ஏற்றத்தாழ்வுகளும் உலவும் என்று சொன்னால், அது அத்தகைய தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமைந்து விடும்.

ரத்த பேதம், பால்பேதம் உள்ளிட்ட எந்த பேதங்களும் கூடாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இத்தகைய வேறுபாடுகளும், மாறுபாடுகளும் இருக்கவே செய்கிறது. அதனை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது. மனமாற்றம் அவசியம்! மனம் மாறுவார்கள் என்றும் காத்திருக்க முடியாது, சட்டங்கள் ஏராளமாகத் தேவைப்படுகிறது. ஒருபக்கம் சட்டங்களும் - இன்னொரு பக்கம் பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தச் சட்டங்களை இயற்றக் காத்திருக்கிறது, தயாராக இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழகம் போன்ற பெரியாரிய இயக்கங்களும் - அம்பேத்கரிய இயக்கங்களும் - சமூக சீர்திருத்த அமைப்புகளும் இந்தச் சீர்திருத்த பரப்புரைகளை நாடு முழுவதும் சென்று நடத்தியாக வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை அனைத்தையும் ஒரே ஒரு சமூக விரோதச் சம்பவம் காலி செய்துவிடும்.

சமூக நல்லிணக்கம் - சமூக அமைதி - சமூகச் சமநிலை இல்லாத ஒரு மாநிலத்தில் ஒரு நாட்டில் மற்ற வளர்ச்சிகள் அனைத்தும் வீண் முயற்சிகள்தான்.

அதனால்தான் கல்வி வளர்ச்சி - சமூக வளர்ச்சி - தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இணைத்தே நான் சொல்லி வருகிறேன். இது மட்டுமல்ல, தொழிலதிபர்கள் மாநாட்டிலேயே சமூக வளர்ச்சியை வலியுறுத்தி நான் பேசி வருகிறேன்.

சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும். ஒழிக்க முடியாவிட்டால் அதைப் புறந்தள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு முக்கியத்துவம் தராத சூழலை - மனநிலையை உருவாக்க வேண்டும்.

போலியான பெருமைகளால் வளர முடியாது. உண்மையான நிலைமைகளால்தான் வளர முடியும் என்பதை இன்றைய இளைய சமூகத்திடம் பரப்புரை செய்தாக வேண்டும். அதற்கு வைகோவைப் போன்றவர்கள், என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் திருமாவளவனைப் போன்றவர்கள் இந்த நாட்டுக்குத் தேவை.

தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நமக்கு வடித்துக் கொடுத்த கொள்கைகளை பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழித்தடத்தில் நிறைவேற்றிக் காட்டுபவனாக எனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வேன் என்று உறுதியாக அம்பேத்கர் விருது பெறக்கூடிய நேரத்தில் நான் இந்தக் கூட்டத்தில் உங்களுக்கு முன்னால் உறுதி எடுக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x