Published : 24 Dec 2021 09:53 PM
Last Updated : 24 Dec 2021 09:53 PM

பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்துவது பொது சிவில் சட்டத்தின் முன்னோட்டம்: முமுக கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்

சென்னை: பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்துவது பொது சிவில் சட்டத்தின் முன்னோட்டம் எனக் கூறி முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்த முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு தலைமையகத்தில் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் கூடியது.

தலைமை நிர்வாகக்குழுவில் பின்வரும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.நீண்டகால சிறைவாசிகள் விடுதலைக்கு பரிந்துரை குழு: நீண்டகாலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளின் நிலை மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து மிகுந்த அக்கறையோடு நிர்வாக குழு விவாதித்தது. கடந்த காலங்களில் சிறைவாசிகளின் முன்விடுதலையின் போது, முஸ்லிம் கைதிகள் பாரபட்சம் காட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்ட அவலநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக முதல்வர், வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மன நிலை, உடல் ஆரோக்கியம், தற்போது உள்ள சூழ்நிலை என அனைத்தும் அறியும் வகையில் முன் விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை நிர்வாகக்குழு வரவேற்கிறது.

தமிழக அரசு அமைத்துள்ள இந்த குழுவின் கால வரம்பை அதிக பட்சம் மூன்று மாதங்களுக்குள்ளாக என்று நிர்ணயிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையத்தின் கால வரம்பு முடிவடைந்து பரிந்துரைகள் வரும் வரை 60 வயதை கடந்த வயது முதிர்ந்த, மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு நீண்ட நாள் பரோல் அளிக்கப்பட வேண்டும் என்றும் தலைமை நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.

2.பெண்களின் திருமண வயது: மத்திய பாஜக அரசு பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தியிருப்பது முற்றிலும் மோசடியான, திசைதிருப்பும் செயலாக உள்ளது. 18 வயது வாக்களிப்பதற்கும், ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கும் தகுதியானதாக உள்ளபோது, திருமணத்திற்கு தகுதியில்லை என்றாக்குவது, பெரும்பான்மையான மக்களைக் குற்றவாளிகளாய் ஆக்கும் நோக்கில் உள்ளது என இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்காளர்கள் வைத்துள்ள விமர்சனம் குறிப்பிடத்தக்கது.
16 வயதுக்கு மேல் சம்மதத்துடனான பாலுறவைக் குற்றமில்லை என்று சட்டம் வைத்துள்ள சூழலில் 18 வயதில் திருமணம் செய்வது குற்றம் என்று கூறுவது வேடிக்கையானது. பொது சிவில் சட்டத்தின் முன்னோட்டம் போலக் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது வரவேற்கத்தக்கதே என்றும் இச்சட்டம் முற்றிலுமாகக் கைவிடப்பட்ட வேண்டும் எனவும் இந்த நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.

3.வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் முடிவை இந்த நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது ஜனநாயக சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறது. கிராமப்புற மக்களின் வாக்குரிமையை இது பறிக்கும். ஆதார் பயன்பாடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு விரோதமாகவும் இது அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டம் திரும்ப பெறப்பட வேண்டும் என நிர்வாகக்குழு கோருகின்றது.

4.மஞ்சப்பை வரவேற்கத்தக்க முன்னெடுப்பு: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் நெகிழிப் பைகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்திடும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள ‘மஞ்சப்பை’ திட்டத்தை இந்த நிர்வாகக்குழு மனமார வரவேற்கிறது.

5.எண்ணூர் அனல் மின் நிலையம்: எண்ணூரில் புதிதாக அனல்மின் நிலையம் அமைத்திட மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கை வெளிவந்துள்ளது. இது அப்பகுதியின் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில் (தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர்), பாலாஜி நரசிம்மன் ஆகியோர் குழு அறிக்கை அளித்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் சுமார் 38 தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் சூழலில் புதிதாக அனல்மின் நிலையமும் வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எண்ணூர் பகுதியின் சுற்றுச்சூழலைக் கருத்திற்கொண்டு அனல்மின் நிலைய முயற்சியை அரசு கைவிட வேண்டும் என இந்த நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறாக ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x