Published : 21 Dec 2021 06:32 AM
Last Updated : 21 Dec 2021 06:32 AM

‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி சிறப்பு கலந்துரையாடல்; எதையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்வதில் தனித்துவமானவர் அப்துல் கலாம்: கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: ‘எதையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்வதில் தனித்துவமானவர் அப்துல் கலாம்’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில்அவருடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு குறிப்பிட்டனர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பெங்களூரிலுள்ள இஸ்ரோவிண்வெளித் துறையின் மேனாள் கவுரவப்பேராசிரியர் டாக்டர் பத்ம ஒய்.எஸ்.ராஜன்,தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிமன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது:

இஸ்ரோ விண்வெளித் துறையின் மேனாள்கவுரவப் பேராசிரியர் டாக்டர் பத்ம ஒய்.எஸ்.ராஜன்: 1965-ம் ஆண்டில் 22 வயது இளைஞனாக அகமதாபாத்தில் பணியாற்றியபோது கலாமை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவர் ராக்கெட் இன்ஜினீயராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். எதிலும், இது தன் வேலையில்லை என்று விலகி நிற்காத சிறப்புக் குணம் கலாமுக்கு உண்டு.யார் எதைச் செய்தாலும் அவர்களின் அருகே சென்று, அது என்னவென்று விசாரிப்பார். அவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வார். எதையும் ஆர்வத்துடன் தெரிந்து கொள்வதில் தனித்துவமானவர் அப்துல் கலாம். எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். சுறுசுறுப்புடன் வேலை செய்துகொண்டே இருப்பார்.

அளவற்ற அன்பு கொண்டவர்

முதல்முறையாக அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். படித்துவிட்டுச் சிரித்தார். வேறொன்றும் சொல்லவில்லை. ஆனால், அவரது தந்தையாரைப் பற்றி ஒரு கவிதை எழுதிக்காட்டியதும் பெரிதும் மகிழ்ந்துபோனார். என்னை வெகுவாகப் பாராட்டினார். தனது தந்தை மீதும், உறவுகள், நண்பர்கள் மீதும் அளவற்ற அன்பைக் காட்டினார்.

வேலை என்று வந்துவிட்டால் அவரது கவனம் முழுவதும் அதிலேதான் இருக்கும். வேலையின்போது யார் தவறு செய்தாலும் சற்றே கடுமையாக நடந்துகொள்வார். ஆனால், அந்த சமயத்தில் மட்டுமே கோபமிருக்கும். பிறகு எப்போதும்போல் அன்பு காட்ட ஆரம்பித்து விடுவார். அவரோடு பணியாற்றிய காலங்களும், அவரோடு இணைந்து ‘இந்தியா 2020’ எனும்நூலை எழுதியதும் என்னால் என்றென்றும் மறக்க முடியாத காலங்களாக இன்றைக் கும் உள்ளன.

ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: அறிவியல் துறையில் இருப்பவர்கள் எப்போதும் மற்ற துறைகளில் என்ன நடக்கிறது என்பதையும் அடிக்கடி கவனித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்பதை அடிக்கடி வலியுறுத்தியவர் அப்துல் கலாம்.அவ்வாறு சொன்னதோடு நில்லாமல், அனைத்து துறைகளிலும் தனது கவனத்தையும். சிந்தனையையும் செலுத்திய முன்மாதிரியான ஆளுமை என்று கலாமைச் சொல்லலாம்.

உள்நாட்டிலேயே இந்தியாவின் பாதுகாப்புக்கான அணு ஆயுத தொழிநுட்ப கண்டுபிடிப்புகளைத் தயாரிக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாகஇருந்தார். அக்கறையுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றினார்.

வெளிநாடுகளில் முனைவர் பட்டம்பெற்றுவருபவர்களுக்கு இஸ்ரோவில்உயர் பதவிகளும், அதிக ஊதியமும்வழங்கப்பட்டன. இந்தியாவில் பொறியியல் பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டுவருபவர்களுக்கு இரண்டாம் நிலையேகிடைத்து வந்தது. தனது சிந்தனையாலும், அறிவாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் இதனை மாற்றி உயர் நிலையை அடைந்த சிறப்புக்குரியவர் கலாம்.

எந்தப் பணியைச் செய்தாலும் குழுவினருடம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்பட்டவர் கலாம். மனதில் உறுதியும், நோக்கத்தில் தெளிவும் இருந்தால் வெற்றியை அடைய முடியும் என்பதை தன் வாழ்வின் மூலமாக இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதிய வைத்துச் சென்றுள்ளார். கலாம் கனவு கண்ட பாதையில் இன்றைய இளைய தலைமுறையினர் சென்றால், அவர்களும் வாழ்வில் உயரலாம். நம் தேசத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00191 என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x