Published : 18 Dec 2021 05:06 PM
Last Updated : 18 Dec 2021 05:06 PM

கோவில்பட்டியில் மீன் கடை உரிமையாளர் கடத்தல் வழக்கு: 5 பேர் கைது, 2 கார்கள் பறிமுதல்

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், ரமேஷ், ராஜா, கருத்தப்பாண்டி, ஏமராஜ்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மீன் கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.6 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சிவா (37). இவர் மீன் கடை நடத்தி வருகிறார். இவர் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ராஜகோபால் நகர் பகுதியில் வசித்து வரும் தனது தாயைப் பார்க்க கடந்த 14-ம் தேதி வந்துள்ளார்.

அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிவாவைக் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், சிவாவின் மனைவியிடம் செல்போனில் பேசிய மர்ம நபர்கள் சிவாவை விடுவிக்க ரூ.6 லட்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து சிவாவின் மனைவி கடந்த 16-ம் தேதி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினரின் ஆலோசனைப்படி சிவாவின் மனைவி கடத்தல்காரர்களுக்குத் தொடர்புகொண்டு பணம் தருவதாகக் கூறினார். இதனையடுத்து, கடத்தல்காரர்கள் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே பணத்துடன் வருமாறு கூறினர்.

உடனடியாக கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்காக போலீஸார் அப்பகுதியில் முன்னதாகவே சென்று பதுங்கியிருந்தனர். காரில் வந்த கடத்தல்காரர்கள் போலீஸார் இருப்பதைக் கவனித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். மேலும், மாட்டிவிடுவோம் என்று பயத்தில், சிவாவைக் காட்டுப்பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.

இருப்பினும், வாகனத்தை விடாமல் பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர், காரில் இருந்த 5 பேரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (29), ரமேஷ் (24), அவரது நண்பர்கள் அகஸ்டின் ராஜா, கருத்தப்பாண்டி (25), ஏமராஜ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கும், கடத்தப்பட்ட சிவாவுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், அதன் காரணமாக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவாவைக் கடத்திப் பணம் கேட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீஸார் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட போலீஸாரை எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x